மதுரை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆன்மிகம் மற்றும் சுற்றுலா தலமாக அழகர்கோவில் திகழ்ந்து வருகின்றது.
இங்குள்ள ஶ்ரீ கள்ளழகர் திருக்கோவில், பழமுதிர்சோலை முருகன் கோவில், மலை உச்சியில் உள்ள நூபுரகங்கை தீர்த்தம் மற்றும் ராக்காயி அம்மன் கோவிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று மிலாடிநபி மற்றும் நாளை, நாளை மறுநாள் என மூன்று நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக, அழகர்கோவிலில் பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.
இதன் காரணமாக, அழகர்கோவிலில் உள்ள ஶ்ரீ கள்ளழகர் சன்னதி, பழமுதிர்சோலை முருகன் சன்னதி, நூபுரகங்கை தீர்த்தம், ராக்காயி அம்மன் சன்னதி, மற்றும் பதினெட்டாம்படி கருப்பணசாமி ஆகிய சன்னதிகளில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து, ஒருமணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வழிபட்டு வருகின்றனர்.
மேலும், பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்படுவதால், திருக்கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதுடன், திருக்கோவில் பணியாளர்கள் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.