உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நாளை ஓய்வுபெற உள்ள நிலையில், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் நேற்று அவருக்கான பிரிவு உபசார விழாவை ஏற்பாடு செய்தது. அந்த விழாவில் மனநெகிழ்ச்சியுடன் உரையாற்றிய அவர், “1985 ஆம் ஆண்டு சட்டத் துறையில் பயணம் தொடங்கியது. இன்று நீதித் துறையில் சேவை செய்த ஒருவராக, முழு திருப்தியுடனும் நெஞ்சளவு நிறைவுடனும் நான் வெளியேறுகிறேன்” என தெரிவித்தார்.
தொடர்ந்து, அரசியலமைப்பின் பரிணாம தன்மையை குறிப்பிட்ட அவர், “அரசியலமைப்பு நிலைபெற்ற ஒன்றல்ல; காலத்துக்கேற்ப வளர்ந்து கொள்ளும் ஆவணம். நீதிமன்றங்களும் சமூக மாற்றங்களுக்கு ஏற்ப செயல்பட வேண்டும்” என்றார்.
பட்டியலினத்தவருக்கான இடஒதுக்கீட்டில் கிரீமி லேயர் கோட்பாட்டை கொண்டுவர வேண்டுமென தாம் கூறியபோது, தன் சொந்த சமூகத்திலிருந்தே எதிர்ப்பு எழுந்ததாகவும் கவாய் நினைவுகூர்ந்தார். மேலும், “ஒரு பழங்குடியினரின் மகனை நகர்ப்புற வளமுள்ள குடும்பக் குழந்தையுடன் சமமாகப் போட்டியிட வைக்க முடியுமா? கல்வி வாய்ப்புகள், வாழ்க்கை சூழல் போன்றவை ஒரே அளவில் உள்ளதா?” என கேள்வி எழுப்பினார்.
டாக்டர் அம்பேத்கர் வலியுறுத்திய சமூக–பொருளாதார நீதி குறித்து பேசும்போதும் கவாய் உருக்கமாகப் பேசினார். “சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை நீக்காதால், ஜனநாயக அமைப்பு சீட்டுக்கட்டு வீடு போல சிதறிவிடும்” என 1949 நவம்பர் 25 அன்று அம்பேத்கர் கூறிய எச்சரிக்கையை நினைவூட்டினார். நீதித்துறை எதிர்பார்த்த சமநிலை நீதி மற்றும் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கத் தான் செயல்பட்டேன் எனவும் அவர் தெரிவித்தார்.
2023 மே 14 அன்று உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பதவியேற்ற பி.ஆர். கவாய், 2010 இல் பதவியில் இருந்த கே.ஜி. பாலகிருஷ்ணனுக்குப் பிறகு பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இரண்டாவது தலைமை நீதிபதியாகும். அவர் ஓய்வுபெறும் நிலையில், வரும் நவம்பர் 24ஆம் தேதி நீதிபதி சூர்யகாந்த் புதிய தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்க உள்ளார்.
















