மினரல் வாட்டர் கம்பெனிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு!

விருதுநகர் மாவட்டத்தில் அரசு அனுமதியின்றி நிலத்தடி நீரை அகற்றி விற்பனை செய்கிற மினரல் வாட்டர் கம்பெனிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அழகாபுரியைச் சேர்ந்த விடியல் வீர பெருமாள் என்பவர் தொடர்ந்த வழக்கில், “சிவகாசி, ஆனைக்குட்டம், திருச்சுழி, திருவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை, மீசலூர், காரியாபட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் மினரல் வாட்டர் கம்பெனிகள் அரசின் அனுமதியின்றி நிலத்தடி நீரை பெருமளவில் எடுத்து விற்பனை செய்து வருகின்றன. சில நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட லட்சக்கணக்கான லிட்டர்கள் கூடுதலாக எடுத்து வருகின்றன. இதனால் விவசாய கிணறுகள், சிறிய நீரோடைகள், குளங்கள் உள்ளிட்ட நீர்மூலங்கள் வற்றிக் காணப்படுகின்றன. குடிநீருக்காக பொதுமக்கள் தவிக்கின்றனர்” என தெரிவிக்கப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் ஏ.டி. மரியகிளாட் அடங்கிய அமர்வு, “நிலத்தடி நீர் சுரண்டலை தடுக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் நலன் மற்றும் நீர்வளத்தை பாதுகாக்க மாநிலம் முழுவதும் வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வழிகாட்டுதல்களை அதிகாரிகள் கடுமையாக அமல்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், அதன் விளைவாக பெரும் பாதிப்புகள் ஏற்படக்கூடும்” என தெரிவித்தனர்.

மேலும், “சட்டவிரோதமாக நிலத்தடி நீரை வணிக நோக்கில் பயன்படுத்தும் நிறுவனங்களை கண்டறிந்து, அவர்கள்மீது குற்றவியல் மற்றும் உரிமையியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களிடம் இழப்பீட்டு தொகையும் வசூலிக்கப்பட வேண்டும். மாவட்ட அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Exit mobile version