பெங்களூரு : பாலியல் பலாத்கார வழக்கில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் தொகுதியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அவரது தண்டனை தொடர்பான விவரம் நாளை அறிவிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.
கர்நாடகாவின் ஹாசன் மாவட்டம், ஹொளேநரசிபுராவில் உள்ள தனது இல்லத்தில் பணியாற்றி வந்த 47 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கடந்த ஆண்டு பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவாகி, அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், தீர்ப்பு ஜூலை 30ம் தேதி வெளியிடப்படும் என நீதிபதி கஜானன் பட் அறிவித்திருந்தார். ஆனால், தொழில்நுட்ப காரணங்களால் தீர்ப்பு இன்று வரை ஒத்திவைக்கப்பட்டது.
இன்று பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் இருந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக, குற்றம் சாட்டப்பட்டது நீதிபதி உறுதி செய்தார். இதையடுத்து, அவருக்கான தண்டனை நாளை அறிவிக்கப்பட உள்ளது.