ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே, மகனின் மரண துக்கம் தாங்க முடியாமல் தம்பதியினர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கந்தசாமியூர் பகுதியை சேர்ந்த வேலுசாமி (வயது 53) என்பவர் விவசாயியாக பணியாற்றி வந்தார். அவரது மனைவி தீபா (40). இவர்கள் ஒரே மகனான பிரதீப் (22) கடந்த ஏப்ரல் மாதத்தில் தறி குடோன் மேற்கூரை மேலே ஏறி வேலை செய்வதற்காக சென்றபோது, ஆஸ்பெஸ்டாஸ் சீட் உடைந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.
மகனின் மரணம் தம்பதிக்கு மன உளைச்சலாக இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 1 மணியளவில், இருவரும் வீட்டில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர்.
தகவலறிந்த காவுந்தப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். வீட்டில் இருந்து ஒரு கடிதம் கைப்பற்றப்பட்டது. அதில், “மகன் பிரிவை தாங்க முடியாமல் பூச்சி மருந்தை குடித்தோம்” என எழுதியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும், தற்கொலைக்கு முன் தீபா, ஒரு உறவினருக்கு ‘பிரதீப்பின் இழப்பை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நாங்களும் அவனை தேடி செல்கிறோம்’ என ஒரு வாய்ஸ் மெசேஜ் அனுப்பியதும் தெரியவந்துள்ளது.
போலீசார் இதற்கான மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.