தரமற்ற விதைகள் மற்றும் படைப்புழு தாக்குதலால் மக்காச்சோள சாகுபடி பாதிப்பு தேனி விவசாயிகள் வேதனை!

தேனி மாவட்டத்தில் விவசாயிகளின் முக்கிய வாழ்வாதாரப் பயிர்களில் ஒன்றான மக்காச்சோள சாகுபடி, இந்த ஆண்டு போதிய மழையின்மை, தரமற்ற விதைகள் மற்றும் படைப்புழு தாக்குதல் போன்ற மும்முனைத் தாக்குதலால் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. போடி மீனாட்சிபுரம், விசுவாசபுரம், பெருமாள் கவுண்டன்பட்டி, ராசிங்காபுரம், ஆண்டிபட்டி மற்றும் பெரியகுளம் உள்ளிட்ட தாலுகாக்களில் சுமார் 10 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. குறைந்த பராமரிப்பு மற்றும் குறைவான நோய் தாக்குதல் காரணமாக விவசாயிகள் இதில் ஆர்வம் காட்டி வந்த நிலையில், இந்த ஆண்டு நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.

பொதுவாக மக்காச்சோளம் என்பது பாப்கார்ன், ஸ்வீட் கார்ன் தயாரிப்பு மட்டுமின்றி, சத்து மாவு தயாரிப்பு மற்றும் கோழித் தீவன உற்பத்திக்காகப் பெருநிறுவனங்களால் அதிக அளவில் கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு நல்ல மழைப்பொழிவு இருந்ததால் விளைச்சல் அமோகமாக இருந்ததுடன், சந்தையில் விலையும் திருப்திகரமாக இருந்தது. இதனால் உற்சாகமடைந்த விவசாயிகள் இந்த ஆண்டும் தீவிரமாகச் சாகுபடியில் இறங்கினர். ஆனால், தனியார் நிறுவனங்கள் வழங்கிய சில ரக விதைகள் தரமற்றதாக இருந்ததால், முளைப்புத் திறன் பாதிக்கப்பட்டதோடு, பயிர்கள் வளரும் போதே கொடிய ‘படைப்புழு’ தாக்குதலுக்கு உள்ளாகின.

இதற்கிடையில், கடந்த சில மாதங்களாகத் தேனி மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சி மற்றும் போதிய பருவமழை இன்மை காரணமாகப் பயிர்கள் கருகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. விளைச்சல் கடுமையாகக் குறைந்த நிலையிலும், சந்தையில் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காதது இடியாய் இறங்கியுள்ளது. ஆறு மாதங்களுக்கு முன்பு ஒரு குவிண்டால் 2,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மக்காச்சோளம், தற்போது 700 ரூபாய் வரை சரிந்து 1,800 ரூபாய் அளவிலேயே விற்பனை செய்யப்படுகிறது. சாகுபடிச் செலவு கூடத் தேறாத நிலையில், வாங்கிய கடனை எப்படித் திருப்பிச் செலுத்துவது என்று தெரியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

வேளாண் துறையினர் தரமற்ற விதைகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வறட்சி மற்றும் பூச்சித் தாக்குதலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. மேலும், இடைத்தரகர்களின் தலையீட்டைத் தவிர்த்து, அரசு நேரடி கொள்முதல் நிலையங்களைத் திறந்து நியாயமான விலையை உறுதி செய்ய வேண்டும் எனத் தேனி மாவட்ட விவசாயிகள் கண்ணீருடன் வலியுறுத்தி வருகின்றனர்.

Exit mobile version