மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் நகர கூட்டுறவு கடன் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்கள் நியாய விலை கடை பணியாளர்கள் நகை மதிப்பீட்டாளர்கள் கணினி பணியாளர்கள் ஆகியோர் 25 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் பரதன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஊதிய உயர்வு வெளிப்படை தன்மையுடன் சங்கங்களை வகைப்பாடு செய்யாமல் லாப நஷ்டங்களை கணக்கில் கொள்ளாமல் 2018 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதிய ஊதிய ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டு பணியாளர்கள் பெற்று வந்த சம்பளத்தின் மீது 20 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும், 2021 ஆம் ஆண்டுக்கு பிறகு ஓய்வு பெற்ற பணியாளர்கள் அனைவருக்கும் உடனடியாக ஓய்வூதியம் வழங்க வேண்டும், தேவையற்ற இடங்களில் முதல்வர் மருந்தகம் ஏற்படுத்தி தினசரி ரூ.1,000-க்கு விற்பனை செய்தே ஆக வேண்டும் என கட்டாயப்படுத்துவதை கைவிட வேண்டும், அனைத்து பணியாளர்களும் சொந்த ஊருக்கு அருகாமையில் பணிபுரியும் வகையில் இடமாறுதலுக்கு வழிவகை செய்ய வேண்டும் உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் சங்க ஊழியர்கள் 300-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
