மதுரை அருகே கீழடியில், அ.தி.மு.க., பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி காரில் ஏற முயன்ற முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜுவை, “வேறு காரில் வாங்க” எனத் தடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வரும் தேர்தலை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பழனிசாமி, சமீபத்தில் சிவகங்கை மாவட்டத்தில் இருந்தபோது கீழடி அருங்காட்சியகத்திற்குச் சென்றார். அங்கு ஊர் நுழைவாயிலில், செல்லூர் ராஜு தலைமையில் அ.தி.மு.க., நிர்வாகிகள் அவரை வரவேற்றனர்.
பின்னர், பழனிசாமி காரில் ஏற முயன்ற செல்லூர் ராஜுவிடம், “என் காரில் இடமில்லை; வேறு காரில் வாங்க” என்று கூறியதாகக் கூறப்படுகிறது. இதனால் செல்லூர் ராஜு சிரித்தபடி அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். இந்த காட்சி வீடியோவாக வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது குறித்து செல்லூர் ராஜு விளக்கமளித்தார் :
“பழனிசாமி ‘இசட்’ பிரிவு பாதுகாப்பில் உள்ளவர். அவருடைய காரில் முன்னாள் அமைச்சர்கள் புதுக்கோட்டை விஜயபாஸ்கர், காமராஜ் ஆகியோர் பின்புறம் அமர்ந்திருந்தனர். ஒரு இருக்கை காலியாக இருப்பதைப் பார்த்து, ஏறலாம் என நினைத்தேன். ஆனால், அந்த இருக்கை பாதுகாவலருக்குரியது என்பதால், நான் தயங்கியபோது, ‘வேறு காரில் வாங்க’ என்று தலைவர் கூறினார். இதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை” என்றார்.