லார்சன் & டூப்ரோ (L&T) நிறுவனத் தலைவர் எஸ். என். சுப்பிரமணியன் தனது மனைவி குறித்து பேசிய சர்ச்சை கருத்துக்காக வருத்தம் தெரிவித்துள்ளார்.
ஊழியர்களின் பணிநேரம் தொடர்பாக முன்பு பல்வேறு பேச்சுகள் எழுந்து வருகின்றன. அதன்படி, கடந்த ஜனவரியில் ஊழியர்கள் ஏன் சனிக்கிழமைகளில் வேலை செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுப்பப்பட்டபோது, சுப்பிரமணியன்,
“ஞாயிற்றுக்கிழமைகளில் கூட வேலை செய்ய வைக்க முடியாதது வருத்தமாக இருக்கிறது. நான் ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை செய்கிறேன். நீங்கள் வீட்டில் உட்கார்ந்து என்ன செய்வீர்கள்? உங்கள் மனைவியை எவ்வளவு நேரம் பார்க்க முடியும்? அதற்குப் பதிலாக அலுவலகத்திற்குச் சென்று வேலையைத் தொடங்கலாம்”
என்று கூறியிருந்தார்.
அவரது இந்தக் கருத்து சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தற்போது விளக்கம் அளித்துள்ள சுப்பிரமணியன், “அந்த பேச்சின் போது என் மனைவியை குறிப்பிட்டது காரணமாக, என் மனைவி வருத்தப்பட்டார். நான் சாதாரணமாக உரையாடிக்கொண்டிருந்தது பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. பின்னோக்கிப் பார்க்கும்போது, வேறு விதமாக பதிலளித்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். பொதுவாக நான் எளிமையான முறையில் பேசுவதே என் பாணி” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “அந்தக் கருத்தை திரும்பப் பெற முடியாது. ஆனால் இதே கேள்வி இப்போது வந்தால், நிச்சயமாக வேறுவிதமாக பதிலளித்திருப்பேன். அப்போது நான் மிகுந்த அழுத்தத்தில் இருந்தேன்” என்று கூறியுள்ளார்.