மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை குறித்த தனது கருத்து காரணமாக, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதையடுத்து, சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள மனா கேம்ப் காவல் நிலையத்தில் அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்கு வங்கம்–வங்கதேச எல்லையை ஒட்டி ஊடுருவல் அதிகரித்திருப்பதாக பாஜக அடிக்கடி குற்றம் சாட்டி வருகிறது. இதற்கிடையில், நாடியா மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மஹுவா மொய்த்ரா, “எல்லைப் பாதுகாப்பு என்பது உள்துறை அமைச்சகத்தின் பொறுப்பு. அதை புறக்கணித்து, ஊடுருவலுக்கு டிஎம்சி அரசை குறை கூற முடியாது. நாட்டின் எல்லையை யாரும் காக்கவில்லையென்றால், அதற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாவே பொறுப்பு” எனக் கூறியதாக தகவல்கள் வெளியாகின.
இந்த கருத்து எதிர்ப்பு கிளப்ப, அவரது பேச்சு “ஜனநாயக அமைப்புகளுக்கு அவமதிப்பு, வெறுப்பு பரப்பு, தேசிய ஒற்றுமைக்குத் தடையாகும்” எனக் கூறி, கோபால் சமந்தோ என்ற நபர் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
“பழமொழியைப் புரியாமல் வழக்கு” – மஹுவா விளக்கம்
வழக்குப் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மஹுவா மொய்த்ரா கடுமையாக எதிர்வினைத் தெரிவித்தார். தனது பேச்சு உண்மையில் பெங்காலி மொழிப் பழமொழி என வலியுறுத்திய அவர், “’மாதா கட்டா ஜாவா’ என்பது ஒருவரின் பொறுப்புக்கூறலைக் குறிக்கும் சொற்றொடர். இதை வார்த்தை வார்த்தையாகப் புரிந்து, என் மீது வழக்கு பதிவு செய்திருப்பது முற்றிலும் தவறு. முட்டாள்களுக்கு பழமொழிகள் புரியாது” என்றார்.
அத்துடன், “பாஜக என்னை அரசியல் பலிகடாவாக மாற்றிக்கொள்ள முயல்கிறது. ஆனால் ஒவ்வொரு தடவையும் நான் வலுவாகத் திரும்பி வருகிறேன். என்னை நாடாளுமன்றத்தில் இருந்து நீக்கியபோதும், மீண்டும் வெற்றி பெற்றேன். இப்போது கூட, இந்த வழக்கை நீதிமன்றத்தில் எதிர்கொண்டு வெல்வேன்” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், “ஒவ்வொரு முறையும் பாஜக என்னை குறிவைக்கும் போது, அவர்கள் என்னை இன்னும் வலுவானவளாக மாற்றுகிறார்கள். இதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளாததே அவர்களின் தவறு” என்று மஹுவா மொய்த்ரா சாடினார்.
















