தொடரும் உறவு : கச்சா எண்ணெய் விலையை குறைக்கும் ரஷ்யா – பெரும் லாபத்தில் இந்தியா

அமெரிக்கா – இந்திய உறவுகள் விரிசலை சந்தித்து வரும் நிலையில், ரஷ்யாவுடன் இந்தியாவின் கூட்டாண்மை மேலும் வலுவடைந்து வருகிறது. அமெரிக்கா விதித்த 50% வரி சுமையையும் பொருட்படுத்தாமல், இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. இதனால், மலிவான விலையிலான எண்ணெய் கொள்முதல் மூலம் இந்தியா பெரும் அளவு சேமிப்பை ஈட்டியுள்ளது.

அமெரிக்கா – இந்தியா உறவில் பதட்டம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் பொறுப்பேற்ற பின், வர்த்தக ஒப்பந்தம் செய்யாத நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்கும் உத்தரவை அமல்படுத்தினார். இந்தியாவிற்கும், ஏற்கெனவே இருந்த 25% வரிக்கு மேலாக, ரஷ்யா எண்ணெய் கொள்முதல் காரணமாக மேலும் 25% வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இருநாடுகளுக்கும் இடையில் உறவு பதட்டத்தை சந்தித்து வருகிறது.

ரஷ்யாவின் சலுகை – இந்தியாவுக்கு நன்மை

இந்நிலையில், ரஷ்யா இந்தியாவுக்கு இன்னும் சலுகை காட்டி வருகிறது. சீனாவின் தியான்ஜினில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சந்திப்பு நடைபெற்றது. அதன் பின்னர், ரஷ்யா இந்தியாவுக்கு தள்ளுபடி விலையில் எண்ணெய் வழங்கத் தீர்மானித்துள்ளது.

ராய்ட்டர்ஸ் வெளியிட்ட தகவலின்படி, தற்போது யூரல்ஸ் கச்சா எண்ணெய், பிரெண்ட் எண்ணெயை விட ஒரு பீப்பாய்க்கு $3–$4 குறைவாக விற்கப்படுகிறது. மேலும், செப்டம்பர் மாதத்தில் மட்டும் ரஷ்யா, இந்தியாவிற்கு தினசரி கூடுதலாக 1.5 முதல் 3 லட்சம் பீப்பாய்கள் வரை எண்ணெய் வழங்கத் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவுக்கு மாபெரும் சேமிப்பு

2022ல் ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து, இந்தியா குறைந்த விலையில் ரஷ்ய எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது. இதன் மூலம், 2022 முதல் ஜூன் 2025 வரை, குறைந்தது 17 பில்லியன் டாலர் இந்தியா சேமித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் தரவுகள் தெரிவிக்கின்றன. சில மதிப்பீடுகள் படி, இந்த சேமிப்பு 13 பில்லியன் முதல் 26 பில்லியன் டாலர் வரை இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

பாதுகாப்புத் துறையில் கூட்டாண்மை – S-400 கவசம் விரைவில்

விண்வெளி, அணுசக்தி, பாதுகாப்பு போன்ற துறைகளில் பல தசாப்தங்களாக இந்தியா – ரஷ்ய உறவு நீடித்து வருகிறது. 2018ஆம் ஆண்டு, 5.43 பில்லியன் டாலர் மதிப்பில் 5 எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்க இந்தியா – ரஷ்யா ஒப்பந்தம் செய்தது. இதில் 3 அமைப்புகள் ஏற்கனவே இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 2 அமைப்புகள் 2026 மற்றும் 2027ல் வழங்கப்பட உள்ளன.

வர்த்தக சாதனை

மார்ச் 31, 2025 அன்று முடிவடைந்த நிதியாண்டில், இந்தியா – ரஷ்யா இடையேயான வர்த்தகம் 68.7 பில்லியன் டாலர் என்ற சாதனை அளவை எட்டியுள்ளது. இதில், 63.8 பில்லியன் டாலர் கச்சா எண்ணெய் இறக்குமதியே பிரதான பங்காக உள்ளது. இந்தியாவின் ரஷ்யாவிற்கான ஏற்றுமதி வெறும் 4.9 பில்லியன் டாலர் மட்டுமே.

நீடித்த நட்பு

உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் நடவடிக்கை எடுத்தபோதும், இந்தியா எந்தவித தடைகளிலும் பங்கேற்கவில்லை. மேலும், புடினை நேரடியாக விமர்சிப்பதையும் தவிர்த்து, பாரம்பரிய ரஷ்ய உறவை தொடர்ந்தும் பேணிக்காத்து வருகிறது.

Exit mobile version