தேனி மாவட்டம் தேவாரம் அருகே பொட்டிப்புரம் ஊராட்சியில் உள்ள இந்திரா காலனி, அடிப்படை வசதிகளின்றிச் சிதிலமடைந்து வருவதால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். உயிர் பயத்தில் உறைந்து கிடக்கும் இப்பகுதி மக்களின் கோரிக்கைகள் பல ஆண்டுகளாகச் செவிசாய்க்கப்படாமல் இருப்பது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சின்னமனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பொட்டிப்புரம் ஊராட்சியின் 5-வது வார்டில் அமைந்துள்ள இந்திரா காலனியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு 25 ஆண்டுகளுக்கு முன்பு ‘இந்திரா நினைவு குடியிருப்பு’ திட்டத்தின் கீழ் 60 தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால், தற்போது இந்த வீடுகள் அனைத்தும் இடிந்து விழும் நிலையில் உள்ளன. சுவர்களில் பெரும் விரிசல் ஏற்பட்டு, மேற்கூரை கான்கிரீட் பெயர்ந்து இரும்புக் கம்பிகள் வெளியே தெரிகின்றன. மழைக்காலங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் வடிவதால், மக்கள் அச்சத்தில் தூக்கமின்றித் தவித்து வருகின்றனர். பலர் வீடுகளைக் காலி செய்துவிட்டு வாடகை வீடுகளுக்குச் சென்றுவிட்டதால், எஞ்சிய வீடுகள் இடிபாடுகளுடன் காட்சிப் பொருளாக மாறியுள்ளன.
இப்பகுதி மக்களின் துயரம் இதோடு முடிந்துவிடவில்லை. கிராமத்தின் குடிநீர் மேல்நிலைத் தொட்டி பல மாதங்களாகச் சுத்தம் செய்யப்படாமல் பாசி பிடித்துக் காணப்படுகிறது. சுத்திகரிக்கப்படாத, மாசடைந்த குடிநீரைப் பருகுவதால் குழந்தைகளுக்குச் சளி, இருமல் மற்றும் மர்மக் காய்ச்சல் பாதிப்புகள் தொடர்கதையாகி வருகின்றன. மேலும், ஆண்களுக்காக ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சுகாதார வளாகம் பல ஆண்டுகளாகப் பயன்பாட்டுக்கு வராமல் பூட்டியே கிடக்கிறது. சாலைகளின் இருபுறமும் செடி கொடிகள் வளர்ந்து விஷப்பூச்சிகளின் கூடாரமாக மாறியுள்ளதால், மாலை நேரங்களில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சுகின்றனர்.
குடியிருப்புப் பராமரிப்புக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், சில வீடுகளில் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, வீட்டை இடித்துவிட்டு 5 மாதங்கள் கடந்தும் புதிய கட்டிடப் பணிகள் தொடங்கப்படாததால், திறந்தவெளியில் தங்கும் சூழல் நிலவுவதாகப் பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீருடன் தெரிவிக்கின்றனர். பட்டா கேட்டு முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. “நாங்கள் மனிதர்களாக மதிக்கப்படுவதில்லை” எனப் புலம்பும் இப்பகுதி மக்கள், சின்னமனூர் ஒன்றிய நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டுச் சேதமடைந்த வீடுகளைச் சீரமைக்க வேண்டும் என்றும், சுகாதாரமான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.














