மயிலாடுதுறையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை உருவாக்குவதற்கான கருத்துகேட்பு குழு கூட்டத்தில் காங்கிரஸ் ஆராய்ச்சிதுறை தலைவர் மாணிக்கவாசகம், மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார் பங்கேற்பு;-
மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சியின் 2026 சட்டப்பேரவை தேர்தல் அறிக்கை உருவாக்குவதற்கான கருத்துகேட்பு குழு கூட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பானுசேகர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் ஆராய்ச்சிதுறை தலைவர் மாணிக்கவாசகம், மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார் பங்கேற்றனர். இதில் மயிலாடுதுறை மாவட்டத்தின் கோரிக்கைகளை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், நண்பர்கள், வியாபாரிகள், விவசாயிகள் மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்தவர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டதன் பேரில் ஆலோசனை நடைபெற்றது. இதுகுறித்து மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார் கூறுகையில் தேர்தல் அறிக்கை உருவாக்குவதற்கான கருத்துகேட்பு குழு மக்களின் கோரிக்கைகளை நேரடியாகக் கேட்டறிந்து வருகிறது. மாவட்ட ரீதியான தேவைகளைத் தேர்தல் வாக்குறுதிகளாக மாற்றுவதே இக்குழுவின் முக்கிய நோக்கமாகும். மக்களின் கோரிக்கைகள்: மாவட்டத்தின் வளர்ச்சி, வேளாண்மை மேம்பாடு மற்றும் உள்ளூர் பிரச்சனைகள் குறித்துப் பலரும் நேரில் மனுக்களை அளித்தனர். மேலும், வாட்ஸ்அப் மற்றும் கடிதங்கள் வாயிலாகவும் ஏராளமான ஆலோசனைகள் வரப்பெற்றுள்ளது. திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், தங்களின் தேர்தல் அறிக்கையைத் திமுகவின் அறிக்கையோடு ஒருங்கிணைந்து செயல்படுத்துவதில் உறுதியாக உள்ளது. திமுகவின் சில வாக்குறுதிகளைக் கூடுதல் வலுவுடன் செயல்படுத்துவதற்கான ஆலோசனைகளும் இதில் பெறப்பட்டுள்ளன. மயிலாடுதுறையைத் தொடர்ந்து, இந்தக் குழு அடுத்ததாக நாகப்பட்டினம் மாவட்டத்திற்குப் பயணம் மேற்கொள்ள உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் பெறப்படும் கோரிக்கைகளைத் தொகுத்து, தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் அந்தந்த மாவட்டங்களின் தனித்துவமான தேவைகளை உள்ளடக்கிய முழுமையான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி விரைவில் வெளியிடும் என்றார்.













