திருப்புவனத்தில் போலீசார் விசாரணையின் போது உயிரிழந்த இளைஞர் அஜித்குமாரின் குடும்பத்துக்கு தமிழக அரசு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலினின் உத்தரவுபடி, அவரது தம்பி நவீன்குமாருக்கு அரசுப் பணிக்கான நியமன ஆணையும், இலவச வீட்டு மனை பட்டாவும் வழங்கப்பட்டது.
இச்சம்பவத்தையடுத்து, கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் நேற்று அஜித்குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இதன்போது, முதல்வர் ஸ்டாலின் நேரடியாக மொபைல் வாயிலாக அஜித்குமாரின் தாயார் மாலதியிடம் பேசினார். “ரொம்ப சாரிம்மா, தைரியமா இருங்க. எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு,” என அவர் கூறினார். பின்னர், அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமாரிடம் பேசிய முதல்வர், “நடக்கக் கூடாதது நடந்துவிட்டது; தைரியமாக இருங்கள்,” என்று தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, நவீன்குமாருக்கு அரசுப் பணிக்கான நியமன ஆணையை அமைச்சர் பெரியகருப்பன் நேரில் வழங்கினார். மேலும், திமுக சார்பில் முதற்கட்டமாக ரூ.5 லட்சம் நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “அண்ணா பல்கலைக்கழக மாணவர் ஞானசேகரன் வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கபட்டதுபோல், இவ்வழக்கிலும் நீதிமன்றம் மூலம் நீதியை பெற்றுத்தர நடவடிக்கைகள் எடுக்கப்படும்,” என்றார்.