இந்தியாவுக்கு அதிக வரிவிதிப்பு விதிக்க அமெரிக்கா திட்டமிட்டிருப்பதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறிய நிலையில், இதனை மத்திய அரசு கடுமையாக கண்டித்துள்ளது.
ஏற்கெனவே, இந்தியாவுக்கு 25 சதவீத இறக்குமதி வரியை ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்நிலையில், தனது ட்ரூத் சோஷியல் வலைதளத்தில் பதிவிட்ட ட்ரம்ப், “இந்தியா ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கி, அதை சந்தையில் பெரிய லாபத்துக்கு விற்பனை செய்கிறது” என குற்றம்சாட்டியுள்ளார். மேலும், “உக்ரைனில் பலர் உயிரிழந்தாலும், இந்தியாவுக்கு அதில் எந்தக் கவலையும் இல்லை” என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
இந்த கருத்துகளைத் தொடர்ந்து, ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்யும் இந்தியாவுக்கு எதிராக வரிவிதிப்பை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
இந்த நிலையில், அமெரிக்கா நியாயமற்ற முறையில் நடந்து கொள்கிறது என மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியா மீது குறிவைத்த அமெரிக்க நடவடிக்கைகள் ஏற்க முடியாதவை என்றும், தேச நலனுக்காக தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.