பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன், கட்சித் தலைவர் அன்புமணி இடையேயான உள்கட்சித் தகராறு தீவிரமாகி வருகிறது. இந்த நிலையில், அன்புமணியை கட்சியில் இருந்து நீக்க அல்லது சஸ்பெண்ட் செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் நடத்திய பொதுக்குழு கூட்டம் செல்லாது எனவும், ராமதாஸ் தரப்பில் இருந்து தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த 9ஆம் தேதி மாமல்லபுரத்தில் அன்புமணி தலைமையில் பாமகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், அன்புமணியின் தலைவர் பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீட்டிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில், தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், அன்புமணி கட்சியின் பெயரில் தனிப்பட்ட லாபத்துக்காக செயல்படுகிறார். அவர் நடத்திய பொதுக்குழு கூட்டம் சட்டவிரோதமானது. தன்னைத்தானே தலைவர் என அறிவித்தது செல்லாது, ராமதாஸ் தலைமையிலான காலத்தில் அன்புமணிக்கு எந்த அதிகாரமும் இல்லை. தலைவர் பதவிக்காலம் முடிந்த நிலையில், நிறுவனர் ஒப்புதல் இல்லாமல் ஓராண்டு நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இது கட்சியின் விதிகளுக்கு முரணானது. என குறிப்பிடப்பட்டுள்ளது.