கோவை :
கோவையில் கல்லூரி மாணவி ஒருவருக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்டித்து, அதிமுக மகளிர் அணி சார்பில் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சமீபத்தில் கோவை துடியலூர் அருகே உள்ள வெள்ளகிணறு பகுதியில், மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த மூன்று குற்றவாளிகளையும் போலீசார் துப்பாக்கி சூட்டில் காயப்படுத்தி கைது செய்திருந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து, சட்டம் மற்றும் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து அதிமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில மகளிர் அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வளர்மதி தலைமையேற்றார்.
அவர் பேசியபோது, “பாதிக்கப்பட்ட மாணவி மூலம் போலீஸ் நிலையத்தில் குற்றவாளிகளை அடையாளம் காணச் செய்ய வேண்டும். உண்மையான குற்றவாளிகள் தப்பி விடாமல் உறுதி செய்ய வேண்டும். பெண்களின் பாதுகாப்புக்காக அதிமுக தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இன்று தமிழகத்தில் 60 வயது பாட்டிக்கும் பெப்பர் ஸ்ப்ரே தேவைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது,” என்றார்.
அர்ப்பணிப்புடன் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர்.

















