தாடியை எடு… மாணவனை கட்டாயப்படுத்திய கல்லூரி..!

கோவையை சேர்ந்த தனியார் மருத்துவ கல்லூரியில் காஷ்மீரை சேர்ந்த மாணவனுக்கு தாடியை முழுமையாக எடுக்க கூறி வற்புறுத்தியதாக குற்றம் சாட்டி இந்திய மாணவர் சங்கம் மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தனியார் மருத்துவக் கல்லூரியை கண்டித்து பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.

மாணவனை தாடியை எடுக்க வற்புறுத்தி கையெழுத்திட நெருக்கடி கொடுத்ததாகவும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணான விதிகளை ஏற்படுத்திய கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கப்பட்ட அந்த மனுவில் கூறி இருப்பது, கோவை மாவட்டம் இந்தியாவின் கல்விதுறையில் ஒரு முக்கிய பங்காற்றுகிறது. பல்வேறு மாநிலங்களை சார்ந்த மாணவர்கள் மட்டுமின்றி,
அயல்நாட்டு மாணவர்களும் கோவையில் பயின்று வருகிறார்கள். கலை அறிவியல்,
பொறியியல்,தொழில் நுட்பம், மருத்துவம், வேளாண்மை என அனைத்து உயர்கல்வியிலும் கோவையில் தரமான கல்வி வழங்கப்படுகின்றது.

இந்நிலையில்
காஷ்மீர் பள்ளத்தாக்கை சார்ந்த இளைஞர் , டாக்டர் சுபைர் அகமது அவர்கள் தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் (NBEMS) நடத்திய NEET-SS தேர்வில் தேர்ச்சி பெற்று, இரண்டாவது கவுன்சிலிங் சுற்றின் மூலம் சிறுநீரகவியல் (நெப்ராலஜி) துறையில் உயர்கல்விக்கான இடம் KMCH மருத்துவகல்லூரியில் ஒதுக்கப்பட்டுள்ளது.

மாணவர்
தனது சேர்க்கை முறைகளை முடிக்க கோவை KMCH மருத்துவ கல்லூரிக்கு சென்றபோது கல்லூரி நிர்வாகம் காஷ்மீர் மாணவர் சுபைர் அகமது அவர்களின் தாடியை முழுமையாக எடுக்க வேண்டும் என்று கையெழுத்திட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
அச்சமயம் மாணவர் சுபைர் அவர்கள் நான் மருத்துவ கல்வியின் அனைத்து நடைமுறைகளுக்கும் கட்டுப்படுகிறேன் எனவும்,தாடியை முக கவசம் கொண்டு மறைத்துக் கொள்கிறேன்,
தாடி எனது மத நம்பிக்கை சார்ந்தது என்றும் கூறியுள்ளார்.ஆனால் கல்லூரி நிர்வாகம் அவர் கூறியதை பொருட்படுத்தாமல் அவருக்கு மருத்துவ உயர்கல்விக்கான சேர்க்கையை மறுத்துள்ளது.

KMCH மருத்துவ கல்லூரி நிர்வாகத்தின் இச்செயல் மிகவும் கண்டிக்கத்தது. குறிப்பாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் Article 21 தன் உடல் தோற்றம் குறித்த உரிமையை குடி மக்களுக்கு வழங்கியுள்ளது.மேலும் Article 25 தனக்கு பிடித்த மத வழிபாட்டு நம்பிக்கையை பின்பற்ற உரிமை வழங்கி உள்ளது. அப்படி இருக்கும் பட்சத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணான கல்லூரி விதிகளை KMCH கல்லூரி நிர்வாகம் ஏற்படுத்திக் கொண்டு மாணவனின் சேர்க்கையை மறுத்துள்ளது என்பது கண்டிக்கத்தக்கது.. இதனால் மாணவர் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்..எனவே தாங்கள் தலையிட்டு மாணவனுக்கு ஒதுக்கப்பட்ட படிப்பை தொடர உறுதி செய்து தர வேண்டும்..

அல்லது மாணவன் வேறொரு கல்லூரியில் படிப்பை தொடர , மூன்றாம் கவுன்சிலிங் வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள உதவ வேண்டும். இரண்டாம் கவுன்சிலிங் பொழுது KMCH கல்லூரியில் செலுத்திய முன் பணம் இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுத்தர தேசிய மருத்துவ கவுன்சில் ஆணையத்திற்கு, தமிழக அரசு வலியுறுத்த வேண்டும், அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்..

மேலும் கோவையில் பல கல்வி நிறுவனங்கள் தங்களின் லாப நோக்கத்திற்காக பல்வேறு விதிகளை இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணாக ஒழுக்கம் என்ற பெயரில் உருவாக்கிக் கொண்டு செயல்பட்டு கொண்டு வருகிறார்கள்..

அவ்வாறு செயல்படும் கல்வி நிறுவனங்களில் விதிமுறைகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version