நாட்டின் 77-வது குடியரசு தின விழா வரும் ஜனவரி 26-ஆம் தேதி புதுடெல்லியில் வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட உள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கப் பெருவிழாவின் அணிவகுப்பில் பங்கேற்கக் கோவை ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சி. தர்ஷன் தேர்வாகித் தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார். ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பி.காம். (அக்கவுண்டிங் பைனான்ஸ்) இரண்டாமாண்டு மாணவரான சி. தர்ஷன், நாட்டு நலப்பணித் திட்டத்தின் (NSS) கீழ் இந்தச் சாதனையைப் படைத்துள்ளார்.
முதலில் பாரதியார் பல்கலைக்கழக அளவில் சிறந்த மாணவராகத் தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து, கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள லீடு மேலாண்மைக் கல்லூரியில் கடந்த நவம்பர் 10 முதல் 19 வரை நடைபெற்ற தென்னிந்திய அளவிலான கடினமான அணிவகுப்புத் தேர்வுகளில் பங்கேற்றார். அதில் தனது திறமையை நிரூபித்து, தற்போது தமிழ்நாட்டின் சார்பில் டெல்லி அணிவகுப்பில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். புதுடெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பது இது முதல் முறையல்ல. இக்கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து 12-வது முறையாக இந்த உயரிய மேடையில் பங்கேற்கத் தேர்வாகி வருவது குறிப்பிடத்தக்கது. இது கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் தரம் மற்றும் மாணவர்களின் ஒழுக்கத்திற்குச் சான்றாக அமைந்துள்ளது.
தேசிய அளவில் தமிழகத்திற்கும், கல்லூரிக்கும் பெருமை சேர்த்த மாணவர் சி. தர்ஷனை: எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுந்தர் ராமகிருஷ்ணன் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் பி.எல். சிவக்குமார் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் செ. பிரகதீஸ்வரன் ஆகியோர் நேரில் அழைத்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.ஜனவரி 26 அன்று டெல்லி ராஜபாதையில் நடைபெறும் பிரம்மாண்ட அணிவகுப்பில், முப்படையினர் மற்றும் பல்வேறு மாநிலக் கலைக் குழுக்களுடன் இணைந்து தர்ஷன் அணிவகுத்துச் செல்ல உள்ளார். இச்சாதனை கோவை மாவட்ட மாணவர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
















