கோவை ஜி.டி. நாயுடு மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – சிறப்புகள் என்ன?

கோவை :
கோவை மாவட்ட மக்களின் நீண்டநாள் கனவாக இருந்த அவிநாசி சாலை மேம்பாலம் இன்று திறந்து வைக்கப்பட்டு, போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நாளாக அமைந்தது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று கோயம்புத்தூரில் நடைபெறும் பல்வேறு அரசு திட்டங்களின் தொடக்க விழாக்களில் பங்கேற்று, புதிதாக கட்டப்பட்ட ‘ஜி.டி. நாயுடு மேம்பாலத்தை’ திறந்து வைத்தார்.

புதிய அடையாளம்: ஜி.டி. நாயுடு மேம்பாலம்

கோவை நகரத்தின் வேகமான வளர்ச்சிக்கு இணையாக, போக்குவரத்து நெரிசலை குறைக்க உருவாக்கப்பட்டுள்ள இந்த மேம்பாலம், தென்னிந்தியாவின் முக்கிய தொழில் மற்றும் கல்வி மையமான கோவையின் புதிய அடையாளமாக திகழவிருக்கிறது. புகழ்பெற்ற தொழிலதிபர் மற்றும் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு அவர்களின் பெயரில் இப்பாலம் பெயரிடப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் திறப்பு நிகழ்ச்சி

இன்று காலை சென்னையில் இருந்து கோயம்புத்தூர் வந்த முதலமைச்சர் ஸ்டாலின், முதலில் கொடிசியாவில் நடைபெற்ற உலக புத்தொழில் மாநாட்டை தொடங்கி வைத்தார். ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 39 நாடுகளைச் சேர்ந்த 264 பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.

இதைத்தொடர்ந்து, உப்பிலிப்பாளையம் பகுதியில் கட்டப்பட்டுள்ள ஜி.டி. நாயுடு மேம்பாலத்தை திறந்து வைத்து, சிறிது தூரம் நடைப்பயணமும் மேற்கொண்டார். பின்னர், சிட்கோ தொழிற்பேட்டை குறிச்சி வளாகத்தில் 126 கோடி ரூபாயில் உருவாகவுள்ள தங்க நகைப் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டினார்.

ஜி.டி. நாயுடு மேம்பாலத்தின் தொழில்நுட்ப சிறப்புகள்

அவிநாசி சாலை மேம்பாலத் திட்டம் 2020ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது.
மொத்த நீளம் 10.1 கிலோமீட்டர், அகலம் 17.25 மீட்டர், செலவு 1,791 கோடி ரூபாய் எனும் அளவில் வடிவமைக்கப்பட்டுள்ள இது, Precast Segmental Box Girder என்ற நவீன பொறியியல் முறையில் கட்டப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பகுதியும் தனித்தனியாக தயாரிக்கப்பட்டு பின்னர் இணைக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 1,124 ஆழ்துளைகள் கொண்ட இதற்கு 8 ஏறு-இறங்கு தளங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஹோப்ஸ் – மருத்துவக்கல்லூரி இடையிலான ரயில் பாதையை கடக்க 52 மீட்டர் நீளமும் 725 டன் எடையும் கொண்ட சிறப்பு ரயில்வே கர்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மிகப்பெரிய உயர்மட்ட பாலம் – பல நன்மைகள்

தமிழ்நாட்டிலேயே மிக நீளமான உயர்மட்ட பாலம் என்ற பெருமையைப் பெறும் இந்த மேம்பாலம், சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட முக்கிய தொழில் மாவட்டங்களுடன் கோவையை இணைக்கும் போக்குவரத்து வசதியை பெரிதும் மேம்படுத்தும்.

முன்பு கோவை நகர மையத்திலிருந்து விமான நிலையம் செல்ல 45 நிமிடங்கள் எடுத்தது; இனி அது 10 நிமிடங்களில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. வணிகம், தொழில், கல்வி, மருத்துவம் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல துறைகளுக்கும் புதிய உயிர் ஊட்டும் வகையில் இந்த மேம்பாலம் உருவாகியுள்ளது.

Exit mobile version