ஸ்ரீநகர்: ஜம்மு – காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் மேகவெடிப்பால் ஏற்பட்ட மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி குறைந்தது 60 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 200 பேர் மாயமான நிலையில் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நேற்று காலை பரவலாக பெய்த மழையுடன், கிஷ்துவாரிலிருந்து 90 கிலோமீட்டர் தொலைவில், 9,500 அடி உயரத்தில் உள்ள சோசிட்டி கிராமத்தில் பகல் 12.00 மணி முதல் 1.00 மணி வரை திடீர் மேகவெடிப்பு ஏற்பட்டது. இதையடுத்து கனமழையால் மலைப்பாதையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
சோசிட்டி கிராமத்திலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மச்சைல் மாதா மலைக்கோவிலுக்கு யாத்திரைக்கு சென்றிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் சிக்கினர். சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. வீடுகள் மற்றும் கட்டிடங்கள் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டன.
இதுவரை 170 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 40 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாயமான 200 பேரையும் தேடும் பணி தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினரும், துணை ராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
மலைப்பகுதியில் இடிபாடுகளில் சிக்கி புதைந்துள்ள வீடுகள், கடைகள் உள்ளிட்ட பகுதிகளில் தேடுதல் நடைபெற்று வருவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அச்சம் நிலவுகிறது.