ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டம் சோஸ்டி பகுதியில் ஏற்பட்ட மேகவெடிப்பால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் 10 பேர் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று இரவு பெய்த கடும் மழைக்கு பின் ஏற்பட்ட மேகவெடிப்பால், ஆறுகள் கரைபுரண்டு ஓடியதால் பலர் வெள்ளநீரில் சிக்கினர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற மீட்புக் குழுக்கள், சிக்கியவர்களை காப்பாற்றும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.
“திடீர் வெள்ளப்பெருக்கில் ஏராளமானோர் சிக்கியுள்ளனர். மீட்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன,” என்று கிஷ்த்வார் துணைக் கமிஷனர் பங்கஜ் சர்மா தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என அச்சம் நிலவுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் சமூக வலைதளத்தில், “சோஸ்டி பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய மேகவெடிப்பு காரணமாக கணிசமான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. நிர்வாகம் உடனடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளன. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்,” என்று தெரிவித்துள்ளார்.