காதல் பெயரில் ஏமாற்றி, குழந்தை பிறந்த பிறகு தலைமறைவு ஆகி, வேறு பெண்ணை திருமணம் செய்த துணிக்கடை ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே காயலூரைச் சேர்ந்த திருநாவுக்கரசு. இவர் சென்னையில் தனியார் துணிக்கடையில் சூப்பர்வைசராக பணியாற்றியவர். அங்கு வந்தவாசி அருகே சத்தியவாடி கிராமத்தைச் சேர்ந்த சுகுணா உடன் 2015 முதல் 2020 வரை ஒரே கடையில் வேலை பார்த்தபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டது.
பின்னர் இருவரும் அடிக்கடி சந்தித்து பழகி வந்த நிலையில், 2021ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் சுகுணாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அப்போது “திருமணம் செய்து கொள்வேன்” என்று கூறிய திருநாவுக்கரசு, சொந்த ஊருக்கு செல்வதாகச் சொல்லி தலைமறைவானார்.
இதனால், ஏமாற்றம் அடைந்த சுகுணா, முதலில் சென்னை தி.நகர் போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பின்னர் கடந்த ஜூலை 17-ம் தேதி வந்தவாசி அனைத்து மகளிர் போலீசில் முறையிட்டார்.
வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, திருநாவுக்கரசு தலைமறைவாகி வேம்பு என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு தற்போது 2 வயது பெண் குழந்தைக்கும் தந்தையாக இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, வந்தவாசி அனைத்து மகளிர் போலீசார் திருநாவுக்கரசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

















