பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு பாதயாத்திரையாக வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடும் முக்கிய நீர்நிலைகளான சண்முக நதி மற்றும் இடும்பன் குளம் ஆகியவை மாசடைந்திருப்பதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து, கோயில் நிர்வாகம் தற்போது தீவிரத் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அறுபடை வீடுகளில் ஒன்றான பழநிக்கு வரும் பக்தர்கள், தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தும் முன்பாக சண்முக நதியிலும், இடும்பன் மலையை ஒட்டியுள்ள இடும்பன் குளத்திலும் நீராடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
கடந்த டிசம்பர் 29-ஆம் தேதி சண்முக நதியில் அமலைச் செடிகள் அடர்ந்து வளர்ந்து நீர்நிலையை ஆக்கிரமித்துள்ளதும், அதனால் பக்தர்கள் நீராட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது அதனைத் தொடர்ந்து, ஜனவரி 1-ஆம் தேதி இடும்பன் குளம் குப்பைகளால் சூழப்பட்டு மாசடைந்துள்ள அவலம் குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டது. ஊடகங்களின் இந்தத் தொடர் விழிப்புணர்வுச் செய்திகளால் விழித்துக்கொண்ட கோயில் நிர்வாகம், தற்போது போர்க்கால அடிப்படையில் தூய்மைப்படுத்தும் பணிகளைத் தொடங்கியுள்ளது.
தற்போது பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் சார்பில், சண்முக நதியில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை மற்றும் அமலைச் செடிகளை அகற்றும் பணியில் கோயில் ஊழியர்களுடன் இணைந்து ஏராளமான தன்னார்வலர்களும் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், இடும்பன் குளத்தில் தேங்கியிருந்த பிளாஸ்டிக் கழிவுகள், பழைய துணிகள் மற்றும் இதர குப்பைகளும் முழுமையாக அகற்றப்பட்டு வருகின்றன. தைப் பொங்கல் மற்றும் தைப்பூசத் திருவிழாக்கள் நெருங்கி வரும் வேளையில், பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, நீர்நிலைகள் மீண்டும் மாசடையாமல் இருக்க நிரந்தரக் கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வேண்டும் என்றும், நீர் ஓட்டத்தைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

















