மதுரையில் பாரதிய தபால் ஊழியர் சம்மேளன செயற்குழுக் கூட்டத்தில் மோதல் ஏற்பட்டது. மாநில துணைச் செயலாளர் அருண் குமாருக்கு காயம் ஏற்பட்டது.
மதுரை டியூக் ஹோட்டலில் கடந்த 25 ஆம் தேதி அன்று பாரதிய தபால் ஊழியர் சம்மேளனத்தின் மாநில அளவிலான செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை மதுரை தபால்காரர் அருமுகம் ஏற்பாடு செய்து நடத்தினார்.
ஆனால், பாரதிய தபால் ஊழியர் சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் கடலூர் தனசேகரன் இந்தக் கூட்டத்திற்கு முறையாக அழைக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால், சம்மேளனத்தின் பிற செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மாநிலத் தலைவர் அழைக்கப்படாமல் நடத்தப்பட்ட இந்த செயற்குழுக் கூட்டம் சட்டபூர்வமற்றதும், செல்லாததுமாகும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்த அருமுகம், முன்னதாக வேறு ஒரு தபால் ஊழியர் சம்மேளனத்தில் இருந்த போது பண மோசடி தொடர்பான சர்ச்சைகளில் சிக்கியவர் என்றும், அத்தகைய பின்னணியைக் கொண்ட நபர் பாரதிய தபால் ஊழியர் சம்மேளனத்தின் எந்தக் கூட்டத்துடனும் தொடர்பு கொள்ளக் கூடாது என்றும் மாநிலத் தலைவர் கடலூர் தனசேகரன் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் மத்திய செயற்குழு உறுப்பினர்களான அன்னாத்பால், கே.ஆர். சர்மா,
எம்.பி. சிங் ஆகியோர் கலந்து கொண்டு சில அறிவிப்புகளை வெளியிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை எதிர்த்து, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளூர் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த எதிர்ப்புகளின் போது, கூட்டத்தை ஆதரித்த தரப்பினருக்கும் எதிர்ப்பு தெரிவித்த உறுப்பினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அந்த வாக்குவாதம் திடீரென மோதலாக மாறியதாக கூறப்படுகிறது. இந்த மோதலில், கூட்டத்தை சட்டவிரோதம் என எதிர்த்த பாரதிய தபால் ஊழியர் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் அருண்குமார் என்பவர், எதிர் தரப்பினரால் தாக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாக்குதலில் தலை மற்றும் மார்புப் பகுதியில் பலத்த காயமடைந்த அருண்குமார் உடனடியாக மதுரை அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மதுரை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையை தொடங்கினர். கூட்டம் நடைபெற்ற விதம், அது சட்டபூர்வமானதா என்பதுடன், மோதல் மற்றும் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் மதுரை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.













