திருச்சி: விவசாயிகள் சிபில் ஸ்கோரால் பாதிக்கப்படுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சிபில் ஸ்கோர் பிரச்னைக்கு பிரதமரிடம் பேசியதற்குப் பிறகே தீர்வு கிடைத்ததாக அவர் கூறினார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ் கூறியதாவது :
“விவசாயிகள் பயிர் கடன் பெற சிபில் ஸ்கோர் கேட்பது தவறான நடைமுறை. இதனால் அவர்கள் கடனளவில் மிகுந்த தடைகளை எதிர்கொள்கின்றனர். இந்த நிலைமையை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி, நாங்கள் பிரதமரிடம் நேரில் மனு அளித்தோம். அதற்குப் பின்னர், சிபில் ஸ்கோர் அவசியமில்லை என மத்திய அரசு அறிவுறுத்தி, பழைய நடைமுறையை மீண்டும் அமல்படுத்த உத்தரவிட்டது.”
இதனால், பயிர் கடனுக்காக சிபில் ஸ்கோர் பார்த்து விவசாயிகளை நிராகரிக்கும் நடைமுறை நீக்கப்பட்டுள்ளதாகவும், இதுவே விவசாயிகளுக்கான முக்கிய வெற்றியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த இபிஎஸ், “தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ளன. எதுவும் நடக்கக்கூடும். யூகங்கள் அடிப்படையில் பதிலளிக்க முடியாது. ஒவ்வொரு கட்சிக்கும் தனித்த நிலைப்பாடும் கொள்கையும் உள்ளது. அந்தக் கட்சிகள் தான் முடிவெடுப்பார்கள்” என கூறினார்.
அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளது என்பதை நினைவூட்டிய இபிஎஸ், “பாஜ கூட்டணியில் பல கட்சிகள் உள்ளன. தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு யார் யார் கூட்டணியில் இருப்பார்கள் என்பதனை விரிவாக ஊடகங்கள் வாயிலாக தெரிவிக்கப்படும்” என்றும் கூறினார்.