நாடெங்கும் குழந்தைகள் தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை தருமபுரத்தில், தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ குருஞானசம்பந்தர் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற விழாவில், அப்பள்ளியில் பயிலும் 700-க்கு மேற்பட்ட குழந்தைகள் அருகில் உள்ள தருமபுரம் ஆதீன திருமடத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கலந்து கொண்டு அனைத்து குழந்தைகளுக்கும் பழம் மற்றும் இனிப்புகளை வழங்கி அருளாசி கூறினார். முன்னதாக ஜவஹர்லால் நேரு வேடமணிந்த பள்ளி மாணவன், குருமகா சன்னிதானத்திற்கு மலர்க்கொத்து வழங்கி வரவேற்பு தெரிவித்தார்.
