முதல்வர் மு.க. ஸ்டாலினின் ஜெர்மனி, இங்கிலாந்து பயணம் மூலம் ஈர்க்கப்பட்டதாக கூறப்படும் முதலீடுகள் பெரும்பாலும் விரிவாக்கத் திட்டங்களுக்கானவை என பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி இராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியதாவது :
“முதல்வர் ஸ்டாலின், தனது வெளிநாட்டு பயணங்களில் ரூ.15,516 கோடி முதலீடுகளை ஈர்த்ததாகவும், அதன் மூலம் 17,613 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் உண்மையில், இதில் பெரும்பாலான முதலீடுகள் விரிவாக்கத் திட்டங்களுக்கானவை. தமிழ்நாட்டிலேயே ஈர்க்கக்கூடிய முதலீடுகளை வெளிநாட்டில் கையெழுத்திட்டு வந்ததாக காட்டுவது ஏமாற்றம்.” என தெரிவித்துள்ளார்.
ஜெர்மனி முதலீடு குறித்து :
ஜெர்மனியில் மட்டும் ரூ.7,020 கோடி முதலீடுகள் கையெழுத்தானதாக அரசு அறிவித்திருந்தது. இதில் ரூ.3,201 கோடி மதிப்பில் ஒப்பந்தம் செய்த 3 நிறுவனங்கள் ஏற்கனவே தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் நிறுவனங்களே எனவும், ரூ.5,319 கோடி முதலீடுகள் அனைத்தும் விரிவாக்கத் திட்டங்களுக்கானவை எனவும் அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.
இங்கிலாந்து முதலீடு குறித்து :
இங்கிலாந்தில் கையெழுத்தான ரூ.8,496 கோடி முதலீடுகளும் முழுமையாக விரிவாக்கத் திட்டங்களுக்கானவை. இதில் மட்டும் இந்துஜா குழுமம் ரூ.7,500 கோடி முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது. ஆனால் இந்த குழுமம் ஏற்கனவே சென்னையில் அசோக் லேலண்ட் ஆலையை நடத்தி வருவதோடு, கடந்த ஆண்டு முதலீட்டாளர்கள் மாநாட்டில் அறிவித்த ரூ.1,200 கோடி முதலீடுதான் இதுவரை செயல்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மொத்த முதலீடு குறித்த குற்றச்சாட்டு :
“மொத்தமாக ரூ.15,516 கோடி முதலீட்டில் 89 சதவீதம், அதாவது ரூ.13,815 கோடி முதலீடுகள் விரிவாக்கத்திற்கானவை. இதற்காக கோடிக்கணக்கில் செலவு செய்து வெளிநாடு செல்ல வேண்டிய அவசியமில்லை. வெளிநாட்டுப் பயணத்தின் மூலம் முதலீடுகளை ஈர்த்ததாக மக்களை ஏமாற்றும் முயற்சிகள் பலிக்காது” என அவர் தெரிவித்தார்.
மேலும், “தமிழகத்தில் செயல்படும் நிறுவனங்களின் விரிவாக்க முதலீடுகளுக்காகவே முதல்வர் வெளிநாடு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறுவது, தமிழகத்தில் தொழில் சூழல் மோசமாக இருப்பதை அரசே ஒப்புக்கொள்வதற்கு சமம். தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் திராவிட மாடல் அரசு படுதோல்வியடைந்துவிட்டது. இந்த நாடகங்களை நம்பி மக்கள் ஏமாற மாட்டார்கள்; உரிய நேரத்தில் பாடம் புகட்டுவார்கள்” எனவும் அன்புமணி கடுமையாக விமர்சித்துள்ளார்.
 
			















