முதலமைச்சரின் ஊரகப் பகுதிகளில் விரிவாக்கம் செய்யப்பட்ட காலை உணவு திட்டம் நிகழ்ச்சி

முதலமைச்சரின் ஊரகப் பகுதிகளில் விரிவாக்கம் செய்யப்பட்ட காலை உணவு திட்டம் நிகழ்ச்சியை முதலமைச்சர் தொடக்கி வைத்த நிலையில், மயிலாடுதுறை அருகே தரங்கம்பாடியில் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உணவு பரிமாறி, ஒன்றாக அமர்ந்து உணவு அருந்தினார்:-

நகரம் மற்றும் கிராம பகுதிகளில் மாணவர்கள் காலையிலேயே பள்ளிக்கு புறப்பட்டு விடுவதால், பலர் காலை உணவு உட்கொள்ளாமல், அவர்களது கற்றல் திறன் பாதிக்கப்படுவதை தடுக்க ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளியிலேயே காலை உணவு வழங்கும் திட்டத்தை 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் தொடக்கி வைத்தார். இதன் விரிவுபடுத்தப்பட்ட திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று தொடக்கி வைத்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் தரங்கம்பாடி, குத்தாலம் மற்றும் வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி பகுதிகளில் உள்ள 17 அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1394 மாணவர்களுக்கு இத்திட்டம் தொடங்கியது. தரங்கம்பாடியில் உள்ள தூய ஜான் துவக்க பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு காலை உணவு பரிமாறினர். தொடர்ந்து அவர்கள் மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு உட்கொண்டனர். அப்போது, பூம்புகார், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர்கள் மாணவர்களுக்கு உணவு ஊட்டிவிட்டு மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியில் தரங்கம்பாடி பேரூராட்சி மன்ற தலைவர் சுகுணசங்கரி குமரவேல் பள்ளி ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version