மாமல்லபுரம்:
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவத்துக்குப் பிறகு, கட்சியின் நடவடிக்கைகள் சிலகாலம் நிறுத்தப்பட்டிருந்தன. சுமார் ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு, இன்று கட்சி நடவடிக்கைகள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன.
இதையடுத்து, மாமல்லபுரத்தில் உள்ள தனியார் அரங்கில் இன்று காலை நடிகரும், தமிழ்நாடு வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் தலைமையில் தவெக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து 2,000-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கியமானதாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் முதல்வர் வேட்பாளராக விஜயை முன்மொழிந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், வரவிருக்கும் தேர்தல்களில் கூட்டணி உள்ளிட்ட அனைத்து முக்கிய முடிவுகளையும் எடுக்க தலைவர் விஜய்க்கே முழு அதிகாரம் வழங்கும் தீர்மானமும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தவெக சிறப்பு பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்கள் :
- கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம்.
- பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தும் தீர்மானம்.
- தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 35 மீனவர்கள் கைதுக்கு கண்டனம்.
- வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மூலம் ஜனநாயக உரிமையை பாதிக்க வேண்டாம் என்ற கோரிக்கை.
- டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யாத ஆட்சிக்கு கண்டனம்.
- வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு மழைநீர் வடிகால் பணிகளை விரைவாக நிறைவேற்ற வேண்டும்.
- ராம்சர் சதுப்பு நிலப் பகுதியில் தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட கட்டுமான அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தல்.
- விஜய் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் மாநில அரசு முழு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
- தவெக நிர்வாகிகள் மீது தவறான பிரசாரம் நடத்துபவர்களுக்கு கண்டனம்.
- தமிழக தொழில் முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட கோரிக்கை.
- கருத்துரிமையை ஒடுக்கி வரும் அரசுக்கு கண்டனம்.
- கூட்டணி முடிவுகளில் தலைவர் விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கும் தீர்மானம்.
