லண்டன் :
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது இங்கிலாந்து பயணத்தின் போது ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சமூக நீதியின் தந்தை பெரியாரின் உருவப்படத்தை திறந்து வைத்தார்.
தமிழக பொருளாதாரத்தை டிரில்லியன் டாலர் நிலைக்கு கொண்டு செல்லும் நோக்கில் உலகம் முழுவதும் முதலீட்டாளர்களை ஈர்க்கும் பணிகளில் ஈடுபட்டு வரும் முதல்வர் ஸ்டாலின், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கான அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்கு முன் வெளிநாட்டு பயணங்கள் வாயிலாக ரூ.18,500 கோடி மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பெரியாரின் உருவப்படத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின், “சமூக நீதியை அரசியலமைப்பில் இடம்பெறச் செய்தவர் பெரியார். வாழ்வியல் தத்துவத்தை உலகுக்கு எடுத்துரைத்தவர் அவர்” எனக் கூறினார்.
இதையடுத்து ‘பெரியாரின் மரபு’ மற்றும் ‘திராவிட சிந்தனையின் ஆழமான தாக்கம்’ எனும் இரு புத்தகங்களை வெளியிட்ட முதலமைச்சர், பெரியாரின் சிந்தனைகளை உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டியது அவசியம் என வலியுறுத்தினார்.
“ஆக்ஸ்போர்டில் பெரியாரின் உருவப்படத்தை திறந்து வைத்ததற்கு விட மிகப் பெரிய பெருமை எனக்கு இல்லை” என்று அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

















