கோவை: கோவையில் கல்லூரி மாணவி மீது நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், “கோவை சர்வதேச விமான நிலையம் அருகே நேற்று இரவு நண்பருடன் பேசிக்கொண்டிருந்த மாணவி மீது மூன்று சமூக விரோதிகள் கூட்டுப் பாலியல் வன்முறை நடத்தியது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவி விரைவில் நலம் பெற வேண்டும் என மனமார்ந்த பிரார்த்தனை தெரிவிக்கிறேன்,” என்று கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது: “திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மாநிலம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சரிந்துவிட்டது. சமூக விரோதிகள், காவல்துறையையும் சட்டத்தையும் பயப்படாமல் பெண்களுக்கு எதிராக தொடர் குற்றச்செயல்கள் செய்து வருகின்றனர். திமுக அரசாங்கத்தில் சில அமைச்சர்கள் முதல் காவல்துறை அதிகாரிகள் வரை குற்றவாளிகளைப் பாதுகாக்கும் நிலைப்பாட்டில் உள்ளனர். இதன் விளைவாக மகளிர் பாதுகாப்பு தமிழகத்தில் கேள்விக்குறியாகியுள்ளது,” எனவும் கூறியுள்ளார்.
அண்ணாமலை மேலும் குற்றம்சாட்டியதாவது:
“மக்களுக்கு பாதுகாப்பளிக்க வேண்டிய காவல்துறையினரை, எதிர்க்கட்சியினரை கைது செய்ய மட்டுமே திமுக அரசு பயன்படுத்துகிறது. இதனால் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு முறையே பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைக்கு காரணமான முதல்வர் ஸ்டாலின், வெட்கத்தில் தலைகுனிய வேண்டும்,” எனக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

















