முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் ஜெர்மனி மற்றும் பிரிட்டன் நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டில், தமிழ் மொழிக்கு சேவை செய்த ஜி.யு.போப்பின் கல்லறையில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
ஜெர்மனி பயணத்தை முடித்து தற்போது பிரிட்டனில் உள்ள முதல்வர் ஸ்டாலின், அந்நாட்டு அமைச்சர்களை சந்தித்ததோடு, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஈ.வெ.ரா படத்தை திறந்து வைத்தார்.
அதையடுத்து, 1839-ஆம் ஆண்டு தமிழகம் வந்து தமிழ் கற்று, திருக்குறள், திருவாசகம், நாலடியார் போன்ற புகழ்பெற்ற நூல்களை உலகறிய மொழிபெயர்த்த ஜி.யு.போப்பின் கல்லறையில் அவர் மரியாதை செலுத்தினார்.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவில்,
“ஜி.யு.போப் 19-வது வயதிலேயே தமிழ்நாட்டிற்கு வந்து, தமிழ் மீது தீராத காதல் கொண்டு, மொழிபெயர்ப்பு மற்றும் ஆராய்ச்சியால் தமிழை உலக அரங்கில் கொண்டு சென்றார். ஆக்ஸ்போர்டு சென்றுவிட்டு அங்கு உறங்கும் இந்த தமிழ் மாணவரைப் போற்றாமல் வருவது அறமாகாது. அவரது கல்லறையில் மரியாதை செலுத்திய தருணம் மனதை நெகிழ வைத்தது,” என தெரிவித்துள்ளார்.

















