மதுரை மாவட்டத்தின் குடிநீர்த் தேவைக்காக முல்லைப் பெரியாறில் இருந்து செயல்படுத்தப்படும் அம்ரூத் திட்டத் திறப்பு விழா, மதுரை ‘டிஎன் ரைசிங்’ முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் அரசு விழாவில் பங்கேற்க வந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பந்தல்குடி வாய்க்காலில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக, கடந்த மே மாதம் 31-ஆம் தேதி மதுரைக்கு வருகை தந்தபோது பந்தல்குடி வாய்க்காலை ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின், தூர் வாரும் பணிகளையும், சுற்றுச் சுவர்களைக் கட்டும் பணிகளையும் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தியிருந்தார்.
அதன் தொடர்ச்சியாக, இன்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ரூ. 69 கோடியே 21 லட்சம் செலவில் நடைபெற்று வரும் பின்வரும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்: வெள்ளத் தடுப்புப் பக்கவாட்டுச் சுவர்: கால்வாயின் இருபுறமும் வெள்ளத் தடுப்புப் பக்கவாட்டுச் சுவர் கட்டும் பணிகள். கான்கிரீட் தளமாக மாற்றம்: கால்வாயில் தண்ணீர் செல்லும் திறனை மேம்படுத்துவதற்காக, மண் படுகைத் தளத்தை கான்கிரீட் தளமாக மாற்றும் பணி. கம்பி வேலி அமைப்பு: கால்வாயில் குப்பைகள் மற்றும் இதர கழிவுப் பொருட்கள் கொட்டுவதைத் தடுப்பதற்காக, பக்கவாட்டுச் சுவரின் மேற்புறத்தில் சுமார் 2 மீட்டர் உயரத்திற்கு கம்பிவேலி அமைக்கும் பணி. சிறு பாலங்கள் மறுகட்டுமானம்: கால்வாயின் ஒருபுறத்திலிருந்து மறுபுறத்திற்குச் செல்வதற்காக ஏற்கனவே கட்டப்பட்டிருந்த, மோசமான நிலையிலுள்ள 3 சிறு பாலங்களை மறுகட்டுமானம் செய்யும் பணி. இந்த ஆய்வின்போது, மேற்கூறிய பணிகள் அனைத்தையும் விரைந்து முடித்திட வேண்டும் என்று அலுவலர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
பந்தல்குடி வாய்க்கால் மேம்பாட்டுப் பணிகள் நிறைவு பெறுவதன் மூலம் இப்பகுதி மக்கள் அடைந்துள்ள நன்மைகள்: வெள்ள அபாயம் குறைப்பு: பக்கவாட்டு வெள்ளத் தடுப்புச் சுவர் கரைமட்டத்திற்கு மேல் ஒரு மீட்டர் அளவிற்கு கட்டப்படவுள்ளதால், வெள்ள நீர் வெளியேறுவது தடுக்கப்படும். நீர் தேங்குவது தடுக்கப்படும்: கால்வாயின் தரைத்தளம் கான்கிரீட் தளமாக மாற்றப்படுவதால், நீரின் ஓட்ட வேகம் அதிகரித்து, கால்வாயில் நீர் தேங்காத நிலை ஏற்படும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு: பக்கவாட்டுச் சுவரின் மீது கம்பி வேலி அமைக்கப்படுவதால், கால்வாயில் குப்பைகள் மற்றும் இதர கழிவுப் பொருட்கள் கொட்டுவது தடுக்கப்படும். இந்த மேம்பாடுகள் காரணமாக, இப்பகுதி மக்கள் மழைக்காலங்களில் வெள்ள அபாயமின்றியும், நோய் தொற்று இல்லாமலும் வாழ வழிவகை செய்யப்படும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின்போது, வணிக வரித் துறை அமைச்சர் பி. மூர்த்தி, தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள், மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
















