திமுக – காங்கிரஸ் இடையிலான அண்மைய சர்ச்சைக்கு தீர்வு காணும் நோக்கில், இன்று காங்கிரஸ் எம்பிக்கள் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
சில நாட்களுக்கு முன்பு, கரூர் மாவட்ட மகளிர் காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அந்த புகைப்படத்தை செந்தில்பாலாஜி சமூக வலைதளத்தில் பகிர்ந்தது, காங்கிரஸ் நிர்வாகிகளிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து கரூர் எம்பி ஜோதிமணி, “கூட்டணிக் கட்சியின் நிர்வாகியை திமுக இழுப்பது சரியல்ல” எனக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதன் பின்னணியில், காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை, எம்பிகள் ஜோதிமணி, விஜய் வசந்த், ராபர்ட் ப்ரூஸ் உள்ளிட்டோர் இன்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்தனர். தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இரு கட்சிகளின் தொண்டர்களிடையே விரோதம் ஏற்படாமல் கவனிக்க வேண்டும் என ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூட்டம் முடிந்தபின், எங்களது தொகுதி பிரச்சினைகள் குறித்து முதல்வரிடம் கருத்துகளை முன்வைத்தோம்; அவற்றைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார் என்று ஜோதிமணி தெரிவித்தார்.
இதேபோல், “சிறு அளவில் பிரச்சினைகள் இருந்தாலும் அவை நீண்ட காலம் நீடிப்பதில்லை. இப்போது கூட்டணியில் எந்தப் பெரிய பிரச்சினையும் இல்லை” எனவும் காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை வலியுறுத்தினார்.
















