தோல்விக்கான காரணம் தேடுகிறார் முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன் விமர்சனம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது தோல்விக்கான காரணங்களை முன்கூட்டியே தேடிக்கொண்டு வருகிறார் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

தன் அறிக்கையில் அவர் கூறியதாவது : “வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணி தொடங்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்ததும் முதல்வர் ஸ்டாலின் எதிர்வினை தெரிவித்திருப்பது புரிந்துகொள்ள முடியாத ஒன்று. 2017-ஆம் ஆண்டு சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போலி வாக்காளர்கள் இருப்பதாக கூறி திமுகவே உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததை மறந்துவிட்டாரா?” என கேள்வி எழுப்பினார்.

மேலும் அவர் கூறியதாவது : “மறைந்த ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்த காலத்திலிருந்தே, காங்கிரஸ் ஆட்சியில் மட்டும் 10 முறை வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெற்றுள்ளது. இது தேர்தல் ஆணையத்தின் வழக்கமான நடைமுறை. அதை இப்போது புதிய முயற்சியாகக் காட்டுவது ஏன்?” என்றார்.

“இந்த பணியில் ஈடுபடப்போகும் அதிகாரிகள் தலைமைத் தேர்தல் அதிகாரி முதல் கிராம நிர்வாக அதிகாரிகள் வரை அனைவரும் தமிழக அரசின் கீழ் பணியாற்றுபவர்களே. அப்படியிருக்கையில், தங்களது சொந்த அதிகாரிகளின் நேர்மையை சந்தேகிப்பது எப்படி சரியாகும்?” என்றும் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.

அத்துடன், “வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக நுழையும் நபர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதபடி தடுக்கவே இந்த திருத்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது. தமிழக வாக்காளர்களை நீக்குவதே இதன் நோக்கம் அல்ல” என்றார்.

இறுதியாக, “மழை வெள்ள பாதிப்பு, பயிர் கொள்முதல் தாமதம், தரமற்ற சாலைகள், குடிநீர் பற்றாக்குறை, பள்ளிக்கரணை ஊழல் போன்ற திமுக அரசின் தோல்விகளை மறைக்க திசைதிருப்ப முயற்சிகள் நடைபெறுகின்றன. ஆனால் எவ்வளவு திசைதிருப்பினாலும் மக்கள் உண்மையை மறக்கமாட்டார்கள். திமுகவின் தோல்வி உறுதி” எனவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

Exit mobile version