சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நலமாக உள்ளதாகவும், சிகிச்சை முடிந்து எப்போது வீடு திரும்புவார்கள் என்பதை மருத்துவர்கள் இன்று அறிவிப்பார்கள் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று நடைபெற்ற நிருபர்களை சந்திக்கும் நிகழ்வில், முதல்வரின் உடல்நிலை குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், “முதல்வர் ரொம்ப நன்றாக இருக்கிறார்கள். அவருக்கு உடல்நிலை பாதிக்கப்படுவதற்கு முன்னதாக அவரது உயிரைப் போல நேசித்த சகோதரர் முத்து மறைந்தது. அந்த நாள் முழுவதும் அவர் அங்கேதான் இருந்தார். சாப்பிடாமல் இருந்தார். மறுநாள் சுமார் ஒன்றரை கிலோமீட்டர் நடந்த பிறகு, தலைசுற்றல் ஏற்பட்டது. அதையடுத்து பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார்,” என்றார்.
மேலும் அவர் கூறியதாவது: “நேற்று மற்றும் நேற்று முன்தினம் பல பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இன்று மருத்துவமனை சார்பில் உடல்நிலைக்கு தொடர்பான அறிக்கையும், சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் நேரமும் அறிவிக்கப்படவுள்ளது,” எனத் தெரிவித்தார்.
முதல்வரின் உடல்நிலை சீராக இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியான நிலையில், அவரது விரைவான மீட்பு மற்றும் அரசு செயல்பாடுகள் இயல்புநிலைக்கு திரும்பும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.