தூத்துக்குடி : தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், ரூ.32,554 கோடி மதிப்பிலான முதலீடுகளைப் பெறும் நோக்கில் 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தானது. தூத்துக்குடியில் நடைபெற்ற தொழில் துறை மாநாட்டை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இம்மாநாடு தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் உள்ள மாணிக்கம் மஹாலில் நடைபெற்றது. இதில் பல்வேறு நிறுவனங்களுடன் கையெழுத்தான ஒப்பந்தங்கள் மூலமாக 49,845 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரூ.2,530 கோடி மதிப்பிலான ஐந்து புதிய தொழில் திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் மூலம் 3,600 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வியட்நாமின் ‘வின்பாஸ்ட்’ தொழிற்சாலை தொடக்கம்
தூத்துக்குடி மாவட்டம் சில்லாநத்தம் சிப் காட் பகுதியில், வியட்நாமைச் சேர்ந்த ‘வின்பாஸ்ட்’ நிறுவனத்தின் மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.16,000 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த தொழிற்சாலையில், ஆண்டுக்கு முதற்கட்டமாக 50,000 மின்சார வாகனங்களை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த விழாவில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், “மின்சார வாகன உற்பத்தியில் இந்தியாவின் தலைநகராக தமிழகம் விளங்குகிறது. நாட்டில் உற்பத்தியாகும் மின்சார வாகனங்களில் 40 சதவீதம் தமிழகத்தில்தான் உருவாகின்றன” என்றார்.
முதல் காரில் கையெழுத்து
வின்பாஸ்ட் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் மின்சார காரில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டு, அதன் விற்பனையை துவக்கி வைத்தார். “வியட்நாம் என்றாலே வியப்பு தான். 17 மாதங்களுக்குள் தொழிற்சாலையை நிறுவியதன் மூலம் தமிழகத்தின் தொழில் மேம்பாட்டுக்கு இது முக்கியமான கட்டமாக இருக்கும்” என்று அவர் பெருமிதமாக தெரிவித்தார்.