“தெளிவாக சொல்கிறேன், தமிழகம் தலைவணங்காது” எனத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். சர்வதேச மக்கள் தொகை தினத்தையொட்டி சமூக வலைதளத்தில் பதிவிட்ட அவர், மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
மக்கள் தொகை கட்டுப்பாட்டில் முன்னோடியாகத் திகழும் தமிழ்நாடு, பெண்களுக்கு அதிகாரம் அளித்து, அனைவருக்கும் கல்வி, சுகாதாரம் ஆகியவற்றை வழங்கி வெற்றிகரமான வளர்ச்சியை பெற்றுள்ளது என முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் பதிவில் மேலும் கூறியதாவது :
“தமிழகம் மக்கள் நலனை முன்னிலைப் படுத்தி செயல்படுகிறது. இருப்பினும் நமக்கு கிடைத்தது குறைவான தொகுதிகள், குறைந்த நிதி. நாடாளுமன்றத்தில் எங்கள் குரல் தொடர்ந்து ஒதுக்கப்படுகிறது. ஏன்? ஏனென்றால் தமிழகம் சரியானதைச் செய்தது – அது டில்லியை அச்சுறுத்துகிறது.”
பாஜக மற்றும் அதிமுக கூட்டணியினரையும் கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்,
“பழனிசாமி மற்றும் அவரது கட்சி டில்லியுடன் நிற்பது இன்னும் மோசமானது. நமது முன்னேற்றத்தை தண்டிக்கும் தொகுதி மறு சீரமைப்பை அவர்கள் ஆதரிக்கிறார்கள்” எனக் குற்றம்சாட்டினார்.
இது ஓர் அணியும் டில்லி அணிக்கும் இடையிலான மோதலாக மாறிவிட்டதாக அவர் சுட்டிக்காட்டி,
“மண், மொழி, மானம் ஆகியவற்றை காக்க நாம் ஒரே அணியாகக் கிளம்புவோம். தமிழ்நாடு என்ற இயக்கத்தின் கீழ் அனைவரும் ஒன்றாக எழுவோம்”
மக்கள் உரிமைகளுக்காகவும், மாநிலத்தின் அதிகார தன்னாட்சிக்காகவும் தொடர்ந்து போராடத் தயாராக இருப்பதாகவும், “தமிழகம் தலைவணங்காது” என அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.