தமிழ்நாட்டிற்கு வந்து அதேபோல் பேச முடியுமா ? – பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் சவால்

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பீகாரில் பேசிய கருத்துகளை தமிழகத்திலும் வந்து பேச முடியுமா என முதல்வர் மு.க. ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். எத்தனை அவதூறுகள் பரப்பப்பட்டாலும், 2026ஆம் ஆண்டில் திமுக தலைமையிலான ஆட்சி மீண்டும் அமையும் என அவர் உறுதியுடன் தெரிவித்தார்.

திமுக எம்.பி ஆ.மணியின் இல்ல திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை விமான நிலையத்திலிருந்து தனியார் விமானம் மூலம் சேலம் வந்தடைந்தார். பின்னர் தர்மபுரிக்கு காரில் புறப்பட்டு சென்று, மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “வாக்காளர் பட்டியலில் ‘SIR’ எனப்படும் தீய செயலை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதை எதிர்க்கும் நோக்கில் அனைத்து கட்சிகளும் இணைந்து கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில் வாக்காளர் பட்டியலை திருத்துவது, உண்மையான வாக்காளர்களை நீக்கும் தந்திரமாகும். இதே செயல் பீகாரிலும் நடந்தது,” என்றார்.

அவர் மேலும் கூறியதாவது:
“பீகாரில் இது நடந்தபோது தமிழகத்திலிருந்து தான் முதலில் எதிர்ப்பு எழுந்தது. ராகுல் காந்தி மற்றும் பீகார் எதிர்க்கட்சித் தலைவரும் இதை எதிர்த்தனர். வழக்கு தொடரப்பட்டபோதும், தேர்தல் ஆணையம் இதற்கு சரியான விளக்கம் அளிக்கவில்லை. அதே சமயம், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி இரட்டை வேடம் போடுகிறார். பாஜக அரசால் நடத்தப்படும் தேர்தல் ஆணையத்திற்கு பழனிசாமி பயப்படுகிறார்.”

பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை பாராட்டி பேசுகின்றனர் என்றும் குறிப்பிட்ட ஸ்டாலின், “ஆனால் பிரதமர் மோடி பீகாரில் வாக்கு அரசியலுக்காக நாடகமாடி வருகிறார். அவர் அங்கே பேசிய அதே கருத்தை தமிழ்நாட்டில் வந்து சொல்ல முடியுமா?” என சவால் விட்டார்.

முடிவில், “எத்தனை அவதூறுகளை நமது மீது பரப்பினாலும், 2026 தேர்தலில் திமுக தலைமையிலான ஆட்சி மீண்டும் உறுதியாக அமையும்,” என முதல்வர் ஸ்டாலின் உறுதிமொழி அளித்தார்.

Exit mobile version