முதல்வர் தேர்தல் பயத்தில் ஊர் ஊராகச் செல்கிறார் : நயினார் நாகேந்திரன் விமர்சனம்

திருநெல்வேலி : “தேர்தலைக் குறித்து பா.ஜ.க கூட்டணிக்கு எந்தப் பயமும் இல்லை; அதே நேரத்தில், முதல்வர் ஸ்டாலின் தான் பயந்துகொண்டு ஊர் ஊராகச் சுற்றி வருகிறார்” என்று பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

திருநெல்வேலியில் நடைபெற்ற பா.ஜ.க அலுவலகக் கூட்டத்தில், மூன்று லோக்சபா தொகுதிகளை உள்ளடக்கிய 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க மூத்த தலைவர்கள் எச். ராஜா, கரு நாகராஜன், பேராசிரியர் சீனிவாசன், நாகர்கோவில் எம்.எல்.ஏ. காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன் கூறியதாவது :
“‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டத்தை தேர்தலுக்காகவே துவக்கியுள்ளார் முதல்வர். கடந்த 3 ஆண்டுகளாக மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படவில்லை. தற்போது லோக்சபா தேர்தலை முன்னிட்டு வழங்கப்பட்டிருப்பது திட்டத்தின் உண்மையான நோக்கத்தை கேள்விக்குள்ளாக்குகிறது.”

“தி.மு.க. ஆட்சியை இழக்கும் அபாயத்தால் விரக்தியில் உள்ளது. இதனால் போராட்டப் போக்கில் செயல்படுகிறது. இ.பி.எஸ். பிரசாரத்துக்கு மக்கள் திரளாக வருவது மக்களிடையே ஏற்பட்டுள்ள மாற்றத்தை காட்டுகிறது. மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு சிறப்பாக நடந்தது, இது ஆட்சி மாற்றத்துக்கான அறிகுறி,” என்றார்.

“விஜயின் கட்சி எங்கும் மாநாடு நடத்தலாம். வருமானவரி சோதனைகளுக்கும் பா.ஜ.க-வுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒவ்வொன்றாகவும் தங்கள் பங்கை கேட்டு வருகின்றன. செஞ்சிக்கோட்டை யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட காரணமாக இருந்தவர் பிரதமர் மோடி தான்,” என்று கூறினார்.

மேலும், “முன்னாள் முதல்வர் கருணாநிதி, காமராஜரை கேவலமாக பேசியிருக்கிறார். இப்போது அந்த வார்த்தைகளை கூறினால் அசிங்கமாகிவிடும். இ.பி.எஸ். சொல்வதெல்லாம் பொய் என ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் ஸ்டாலின் சொல்வதுதான் உண்மையா? அவருடைய சொற்பொழிவுகள் தான் பொய்யானவை. பா.ஜ.க கூட்டணியில் புதிய கட்சிகள் விரைவில் சேர உள்ளன. தேர்தலுக்கான தயார் தொடங்கி விட்டது. முதல்வரே தேர்தல் பயத்தில் ஊர் ஊராகச் சுற்றுகிறார். தி.மு.க ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதே எங்கள் குறிக்கோள்” எனவும் நயினார் நாகேந்திரன் கூறினார்.

Exit mobile version