மாநிலம் முழுவதும் நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை: முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு!

சென்னை:

மாநிலத்தில் தெருநாய்கள் ஏற்படுத்தும் தொல்லைகளை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் முக்கிய ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் கே. என். நேரு, மா. சுப்பிரமணியன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டார். குறிப்பாக, நகர்ப்புறம் மட்டுமல்லாது கிராமப்புறங்களிலும் தெருநாய்களுக்கு கருத்தடை செய்வதற்கான சிறந்த மருத்துவ வசதிகளை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மேலும், கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் அதன் விரிவாக்க மையங்கள் மூலம் கருத்தடை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் தெருநாய்கள் கணக்கெடுப்பு நடைபெற வேண்டும் என்றும் முதல்வர் வலியுறுத்தினார்.

மருத்துவர்களுக்கு கருத்தடை தொடர்பான பயிற்சி அளிக்கவும், உடல்நலம் பாதிக்கப்பட்டு சாலைகளில் சுற்றித் திரியும் நாய்களுக்கு பாதுகாப்பான காப்பகங்கள் அமைத்து சிகிச்சை வழங்கவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

முதல்வரின் இந்த அறிவுறுத்தல், தெருநாய்கள் பிரச்சனையை தீர்க்கும் முயற்சியில் முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

Exit mobile version