ஆபத்தில் சென்னை : கடல் மட்ட உயர்வால் கடுமையாக பாதிப்பு – அண்ணா பல்கலைக்கழக ஆய்வு எச்சரிக்கை

சென்னை: கடல் நீர் மட்டம் உயர்வு குறித்து தொடர்ந்து எச்சரிக்கைகள் வெளியாகி வரும் நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவன விஞ்ஞானிகள் இணைந்து நடத்திய ஆய்வில், சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள கடலோரப் பகுதிகள் கடுமையான அபாயத்தில் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் Theoretical and Applied Climatology இதழில் வெளியான இந்த ஆய்வு, வங்காள விரிகுடாவில் கடல் மட்டம் அரபிக்கடலை விட வேகமாக உயர்ந்து வருவதை சுட்டிக்காட்டியுள்ளது. இதனால் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள், குறிப்பாக சென்னை, அதிக ஆபத்துக்குள்ளாகும் நிலை உருவாகியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மைய பேராசிரியர் ஏ. ராமச்சந்திரன் தலைமையிலான குழு, 1992 முதல் 2023 வரை உள்ள அலை அளவீடு மற்றும் செயற்கைக்கோள் தரவுகளை ஆய்வு செய்தது. மேலும், உலகளாவிய 39 காலநிலை மாதிரிகளின் CMIP6 தரவுகளை அடிப்படையாகக் கொண்ட SimCLIM AR6 மாதிரிகள் பயன்படுத்தப்பட்டன.

ஆய்வின் முக்கிய முடிவுகள் :

2100ஆம் ஆண்டுக்குள் இந்தியக் கடலோரங்களில் கடல் மட்ட உயர்வு 25.72 செ.மீ முதல் 110.2 செ.மீ வரை இருக்கலாம்.

தூத்துக்குடியில் ஆண்டுக்கு சராசரியாக 0.17 மில்லிமீட்டர் அளவுக்கு கடல் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

கடல் மட்ட உயர்வுடன் சேர்ந்து கடல் நீர் உட்புகுதல் மற்றும் கடலோர அரிப்பு அதிகரித்து வருகிறது.

நிலத்தடி நீர்நிலைகளில் உப்புநீர் புகுதல் அதிகரிப்பதால், குடிநீர் மற்றும் விவசாய உற்பத்தி ஆபத்தில் உள்ளது.

கடலோர பகுதிகளில் மீன்பிடி மற்றும் விவசாய சமூகங்கள் மிகப்பெரிய அபாயங்களை எதிர்கொள்ள நேரிடும்.

மேலும், 1991 முதல் 2023 வரை நடந்த புயல்களின் பதிவுகள், வங்காள விரிகுடா கடற்கரை எவ்வளவு பாதிக்கப்படுகிறது என்பதை வெளிப்படுத்துகின்றன. இந்த 32 ஆண்டுகளில் வங்காள விரிகுடாவில் 62 புயல்கள் உருவாகியுள்ளன. அதேகாலத்தில் அரபிக்கடலில் வெறும் 9 புயல்கள் மட்டுமே பதிவாகியுள்ளன. இதில், 67.3% புயல்கள் பருவமழைக்குப் பிந்தைய காலத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

விஞ்ஞானிகள் எச்சரிக்கை:

2004 ஆம் ஆண்டு சுனாமி தமிழகக் கடற்கரை எவ்வளவு பாதிப்புக்கு உட்பட்டது என்பதை தெளிவாக காட்டியது. அதேபோன்று, வருங்காலத்தில் கடல் மட்டம் உயர்வும், காலநிலை மாறுபாடுகளும் நமது கடற்கரையை மேலும் பலவீனப்படுத்தும் அபாயம் உள்ளதாக ஆய்வு எச்சரிக்கிறது.

Exit mobile version