தமிழக அரசியல் களத்தில் திராவிட மற்றும் தேசியக் கட்சிகளுக்கு மாற்றாகத் தன்னை முன்னிறுத்தி வரும் நாம் தமிழர் கட்சியின் மிக முக்கியமான கலந்தாய்வு கூட்டம் தாம்பரம் அடுத்த சேலையூரில் மிக எழுச்சியுடன் நடைபெற்றது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்ற இந்த அமர்வில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கொள்கை பரப்புச் செயலாளர்கள் மற்றும் கட்சியின் முதுகெலும்பாகத் திகழும் சமூக ஊடகத் தொழில்நுட்பப் பிரிவு (IT Wing) உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். வரவிருக்கும் தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வரும் வேளையில், கட்சியின் தனித்துவமான கொள்கைகளை மக்களிடம் எப்படிக் கொண்டு செல்வது, சமூக வலைதளங்கள் வாயிலாக மற்ற கட்சிகளின் ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளை ஆதாரங்களுடன் எப்படித் தோலுரித்துக் காட்டுவது என்பது குறித்து சீமான் நிர்வாகிகளுக்குப் பல்வேறு வியூகங்களை வகுத்துக் கொடுத்தார்.
நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசிய ‘ஆட்சி மாற்றம்’ என்ற கருத்தை மிகக் கடுமையாக எள்ளி நகையாடினார். “ஆட்சி மாற்றம் என்றால் என்ன? வெறும் ஆட்களை மாற்றி உட்கார வைப்பது மாற்றமாகுமா? திமுக போனால் அதிமுக, அதிமுக போனால் திமுக என்பது வெறும் நாற்காலி விளையாட்டு. லஞ்சம், ஊழல், மணல் கொள்ளை, மதுபான் விற்பனை ஆகியவற்றில் இரு கட்சிகளுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது? திமுக ‘சொர்ணாக்கா’ என்றால் அதிமுக ‘வர்ணாக்கா’, அவ்வளவுதான் வித்தியாசம். உண்மையான ஆட்சி மாற்றம் என்பது நடைமுறையில், கொள்கையில் ஏற்பட வேண்டும். மழை வெள்ளத்தில் மக்கள் தத்தளிக்கும்போது நிவாரணம் கொடுப்பது பெருமையல்ல, மக்கள் வெள்ளத்தில் சிக்காதவாறு கட்டமைப்புகளை உருவாக்குவதே சிறந்த ஆட்சி” என்று அவர் விளாசினார்.
பாஜகவின் வளர்ச்சி குறித்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த சீமான், “பாஜக தமிழகத்திற்குள் காலூன்றியது யாரால்? தமிழகத்தில் பாஜக வளர கருணாநிதிதான் காரணம் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கே ஒத்துக்கொண்டுள்ளார். 90% இந்துக்கள் எங்களிடம் இருப்பதாக பாஜக கூறுகிறது, 80% இந்துக்கள் எங்களிடம் இருப்பதாக திமுக கூறுகிறது; அப்படியென்றால் உண்மையில் பாஜகவின் ‘பி டீம்’ (B-Team) யார் என்பதை மக்களே முடிவு செய்து கொள்ளட்டும். இன்று திமுகவில் அமைச்சர்களாக இருப்பவர்கள் பாதிக்கும் மேற்பட்டோர் அதிமுகவிலிருந்து வந்தவர்கள் தான், இதில் எங்கே மாற்றம் நிகழும்? திராவிடன் என்றால் யார் என்ற கேள்விக்கு இன்று வரை பதிலளிக்கத் துணியாதவர்கள், தமிழன் யார் என்று எங்களைப் பார்த்துக் கேட்கிறார்கள்” என்று ஆவேசமாக வினவினார்.
கூட்டணி குறித்துப் பேசிய அவர், காசுக்காகவும் சீட்டுக்காகவும் கொள்கையை அடகு வைக்கும் கட்சிகளுடன் கைக்கோர்க்கத் தாம் தயாரில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். “என்னுடைய தூய தமிழ்த் தேசியக் கொள்கைக்கு இணையாக உலகிலேயே எந்தக் கட்சியும் இல்லை. தனித்து நிற்பதற்குத்தான் துணிவும் வீரமும் தேவை; கூட்டத்தோடு கூட்டமாக நின்று வெற்றி பெறுவதில் என்ன பெருமை இருக்கிறது? ஒரு கட்சியுடன் சேர்ந்தால்தான் ஜெயிக்க முடியும் என்றால் எதற்குத் தனிக் கட்சி, எதற்குத் தனி கோட்பாடு? நான் விதைக்கும் இந்த தமிழ்த் தேசியப் பயிரின் பலனை அடுத்த தலைமுறை அறுவடை செய்யும். பாஜக உள்ளே வந்துவிடும் என்று பயமுறுத்துபவர்களுக்கு மத்தியில், அவர்களை உள்ளே வரவிடமாட்டேன் என்று கூறும் துணிச்சல் எனக்கு மட்டுமே உண்டு” என்று சீமான் முழங்கினார்.
















