டெல்லி : மாநிலங்களவையில் மத்திய தொழிற்துறை பாதுகாப்புப் படையினர் (CISF) எதிர்க்கட்சி எம்.பிக்களை தடுக்கின்றனர் என கூறியுள்ள மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இது ஜனநாயக அடிப்படைகளுக்கு எதிரானது என கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் விளக்கம் அளித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 21ஆம் தேதிக்கு பிறகு பல்வேறு அரசியல் விவகாரங்களை முன்வைத்து, எதிர்க்கட்சியினர் தொடர்ந்து இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆபரேஷன் சிந்தூர் விவகாரம் மட்டும் ஜூலை 28–29 தேதிகளில் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் விவாதிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் முன்வைத்த மற்ற கோரிக்கைகள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனை தொடர்ந்து, ஆகஸ்ட் 1ஆம் தேதி, மாநிலங்களவையில் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்திய போது, அமளி வெடித்தது.
அப்போது, மத்திய பாதுகாப்புப் படையினர் அவைக்குள் வந்து எதிர்க்கட்சியினரை தடுக்க முயன்றதாக கார்கே குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் துணைத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில்,
“எதிர்க்கட்சியினரின் ஜனநாயக உரிமையைக் கைக்கொள்ளும்போது, பாதுகாப்புப் படையினர் அவைக்குள் வருவது நம்மை அதிர்ச்சியடையச் செய்கிறது,”
என தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங், அவை நடைமுறை மற்றும் பாதுகாப்பு முறைகளை தவிர்த்து எந்த அதிகார மீறலும் நடைபெறவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.