கதறிய நிலையில் இளம்பெண் கடத்தப்பட்டதாக சிசிடிவி காட்சி — கோவை கமிஷனர் விளக்கம்

கோவை :
கோவை மாவட்டம் இருகூர் அருகே இளம்பெண் ஒருவரை காரில் வலுக்கட்டாயமாக அழைத்து சென்றதாக பரவி வரும் சிசிடிவி காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதுகுறித்து மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் விளக்கம் வழங்கியுள்ளார்.

நேற்று இரவு, இருகூரை அடுத்த ஏஜி புதூர் பகுதியில் இளம்பெண் ஒருவர் நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக வந்த வெள்ளை நிற ஹூண்டாய் i20 கார் நின்று, அதிலிருந்த சிலர் பெண்ணை தாக்கி, கட்டாயப்படுத்தி காருக்குள் ஏற்றி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெண் அலறிய சத்தத்தை கேட்ட அப்பகுதி மக்கள் காரின் அருகில் செல்ல முயன்றபோது, அந்த கார் வேகமாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. இதையடுத்து சிங்காநல்லூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் நடந்த இடத்தில் காவல் துறை அதிகாரிகள் விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து, அப்பகுதி முழுவதும் உள்ள சிசிடிவி காட்சிகள் கைப்பற்றப்பட்டு பரிசோதனை செய்யப்படுகிறது. காட்சிகளில், பெண் ஒருவர் காரில் வலுக்கட்டாயமாக இழுத்து ஏற்றப்படுவது மற்றும் அலறல் சத்தம் பதிவாகியிருப்பது தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக நான்கு சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து கமிஷனர் சரவண சுந்தர் கூறியதாவது :
“இருகூர் அருகே வெள்ளை நிற காரில் பெண் ஒருவர் அலறிய சத்தத்துடன் சென்றதாக ஒரு பெண்மணி 100க்கு அழைத்து தகவல் அளித்துள்ளார். சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை நாம் கைப்பற்றியுள்ளோம். வாகனம் சூலூர் பகுதியிலிருந்து ஏஜி புதூர் வழியாக சென்றதாக தெரிகிறது. ஆனால் இதுவரை எந்த பெண் காணாமல் போனதாகவும், அல்லது கடத்தல் புகார் அளிக்கப்பட்டதாகவும் இல்லை. வாகனத்தின் பதிவு எண் தெளிவாக காணப்படாததால், அதன் அடையாளத்தை உறுதிப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது,” என்றார்.

இளம்பெண் உண்மையில் கடத்தப்பட்டாரா அல்லது குடும்பத் தகராறு காரணமாக உறவினர்களால் அழைத்துச் செல்லப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version