தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய கரூர் கூட்ட நெரிசல் மரணங்கள் தொடர்பான சிபிஐ விசாரணை தற்போது அதன் இறுதி மற்றும் மிக முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் தேர்தல் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கட்டுக்கடங்காத கூட்ட நெரிசலில் சிக்கி, 41 அப்பாவிப் பொதுமக்கள் உயிரிழந்த விவகாரம் நாடு தழுவிய அளவில் கவனத்தைப் பெற்றது. இந்த வழக்கைச் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ (CBI) கையில் எடுத்த நிலையில், வரும் ஜனவரி 12-ஆம் தேதி டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு அதிகாரிகள் அதிரடியாகச் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இந்த வழக்கில் ஏற்கனவே தவெக மாநிலப் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் நிர்மல்குமார், தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மற்றும் மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோரிடம் கரூரில் வைத்து இரண்டு கட்டங்களாக விசாரணை நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, கடந்த டிசம்பர் 29-ஆம் தேதி டெல்லியில் சிபிஐ எஸ்பி சுனில்குமார் தலைமையிலான அதிகாரிகள் நடத்திய மூன்று நாள் விசாரணையில், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் கரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா உள்ளிட்ட உயர் காவல்துறை அதிகாரிகள் என மொத்தம் 15 பேர் தனித்தனியாக ஆஜராகி விளக்கமளித்தனர். இந்த விசாரணையின் போது, கூட்டத்தைக் கட்டுப்படுத்தத் தவறியது யார்? மற்றும் பயணத் திட்டத்தில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து அதிகாரிகள் கிடுக்கிப்பிடி கேள்விகளை எழுப்பினர்.
குறிப்பாக, சென்னையில் இருந்து விஜய் புறப்படுவதில் ஏற்பட்ட காலதாமதம், பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்த நிலையிலும் வாகனத்தை மெதுவாக இயக்கியது மற்றும் காவல்துறையின் எச்சரிக்கையை மீறி வாகனத்தை முன்னோக்கிச் சென்றது போன்ற முக்கியக் குற்றச்சாட்டுகள் குறித்து ஆதவ் அர்ஜுனா மற்றும் நிர்மல்குமாரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் குற்றம் சாட்டிக்கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவ இடத்தைப் பார்வையிட்ட நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடமும், தற்காலிகமாக அமைக்கப்பட்ட மேடை மற்றும் தடுப்புகள் குறித்த தரக்கட்டுப்பாடுகள் பற்றி சிபிஐ விரிவான ஆதாரங்களைத் திரட்டியுள்ளது.
காவல்துறை அதிகாரிகள் மற்றும் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் என அனைவரும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்ட நிலையில், தற்போது கட்சியின் தலைவரான விஜய்யிடமே நேரடியாக விசாரணை நடத்த சிபிஐ முடிவெடுத்துள்ளது. பிரசாரத்தை ஒருங்கிணைத்ததில் யாருடைய உத்தரவுகள் பின்பற்றப்பட்டன என்பதைக் கண்டறியவே இந்த விசாரணை நடத்தப்பட உள்ளதாகத் தெரிகிறது. ஜனவரி 12-ஆம் தேதி விஜய் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக உள்ளதால், கரூர் சம்பவம் தொடர்பான ஒட்டுமொத்த விசாரணையும் விரைவில் முடிவுக்கு வந்து, சிபிஐ தனது இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.














