கரூரில் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணையைச் சிபிஐ அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.கடந்த செப்டம்பர் மாதம் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற த.வெ.க பிரசாரக் கூட்டத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டதால் ஏற்பட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 41 பேர் பலியாகினர். இந்தச் சம்பவம் தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் இந்த வழக்கைச் சிபிஐ விசாரணைக்கு மாற்றியது. மேலும், இந்த விசாரணையை மேற்பார்வையிட ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் கொண்ட குழுவையும் நியமித்தது.
சிபிஐ விசாரணை மற்றும் குழுவின் ஆய்வு: சிபிஐ அதிகாரிகள் ஏற்கனவே த.வெ.க மாநிலப் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலரிடம் விசாரணையை முடித்துள்ளனர். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கரூர் வந்த நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவினர், விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டுப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் மனுக்களைப் பெற்றனர்.
இந்தச் சூழலில், கரூர் பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள சிபிஐ தற்காலிக அலுவலகத்தில் முக்கிய விசாரணை நடைபெற்றது. கரூர் நகர காவல் ஆய்வாளர் (இன்ஸ்பெக்டர்) மணிவண்ணன், முக்கிய ஆவணங்கள் மற்றும் கோப்புகளுடன் சிபிஐ அதிகாரிகள் முன்பு முன்னிலையானார். விபத்து நடந்த அன்று காவல்துறை சார்பில் செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள், கூட்டத்தைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் காவல்துறை அறிக்கைகள் குறித்து அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விரிவாக விசாரணை நடத்தி வருகின்றனர்.விபத்து நடந்த அன்று தலைவர் விஜயின் வருகையில் ஏற்பட்ட தாமதம் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து ஏற்கனவே தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, த.வெ.க தலைவர் விஜய் அவர்களுக்குச் சம்மன் அனுப்பி, அவரிடம் விசாரணை நடத்தச் சிபிஐ திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த விசாரணை அறிக்கை விரைவில் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

















