சபரிமலை மகரஜோதி விழா நெருங்கி வரும் வேளையில், கூடலூர் – குமுளி தேசிய நெடுஞ்சாலையில் கூட்டம் கூட்டமாக மேய்ச்சலுக்குச் செல்லும் தொழு மாடுகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. விபத்து அபாயத்தைக் கருத்தில் கொண்டு மாடுகளை மாற்றுப் பாதையில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐயப்ப பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கேரள மாநிலம் சபரிமலையில் பிரசித்தி பெற்ற மகரஜோதி விழா வரும் ஜனவரி 14-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வாகனங்கள் மற்றும் பேருந்துகளில் குமுளி மலைப்பாதை வழியாகச் சபரிமலை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றனர்.
இந்த முக்கியச் சாலையில், கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தொழு மாடுகள் காலை மற்றும் மாலை நேரங்களில் மேய்ச்சலுக்காக ஓட்டிச் செல்லப்படுகின்றன. இந்த மாடுகள் தேசிய நெடுஞ்சாலையின் நடுவே மந்தையாகச் செல்வதால், பக்தர்களின் வாகனங்கள் நீண்ட நேரம் அங்கேயே காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகிறது. இதனால் குறுகலான மலைப்பாதைகளில் வாகனங்கள் அணிவகுத்து நின்று போக்குவரத்து முடங்குகிறது.
பயண அவசரத்தில் இருக்கும் வாகன ஓட்டிகள் மாடுகளைக் கடக்க முயலும்போது, அவை திடீரென குறுக்கே வருவதால் விபத்துகள் ஏற்படும் அபாயமும் நிலவுகிறது. குறிப்பாக, அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் பனிமூட்டம் அதிகமாக இருக்கும்போது சாலையில் செல்லும் கால்நடைகள் வாகன ஓட்டிகளுக்குத் தெரிவதில்லை. மகரஜோதி விழாவிற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், வரும் நாட்களில் பக்தர்களின் வாகன எண்ணிக்கை மேலும் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இது குறித்துச் சபரிமலை செல்லும் பக்தர்கள் கூறுகையில், “மலைப்பாதை என்பதால் ஏற்கனவே மெதுவாகத்தான் செல்ல முடிகிறது. இதில் சாலை முழுவதும் மாடுகள் ஆக்கிரமித்திருப்பதால் பல மணி நேரம் காலதாமதம் ஆகிறது. போலீசார் இதில் தலையிட்டு, மகரஜோதி விழா முடிவடையும் வரை தேசிய நெடுஞ்சாலையில் மாடுகளை ஓட்டிச் செல்லத் தற்காலிகத் தடை விதிக்க வேண்டும். கால்நடை உரிமையாளர்களை எச்சரித்து, மாடுகளை மாற்றுப் பாதைகள் வழியாக மேய்ச்சலுக்குக் கொண்டு செல்ல அறிவுறுத்த வேண்டும்,” என வலியுறுத்தியுள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலையில் கால்நடைகளை அவிழ்த்து விடுவது சட்டப்படி தண்டனைக்குரியது என்ற நிலையில், நெடுஞ்சாலைத் துறை மற்றும் காவல்துறை இணைந்து இந்தப் பிரச்சினையைத் தீர்க்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.














