விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி வழக்கு : அவசர விசாரணைக்கு நீதிமன்றம் மறுப்பு

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மேற்கொள்ள உள்ள தேர்தல் பிரச்சாரத்துக்கு அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.

வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். திருச்சியில் செப்டம்பர் 13 ஆம் தேதி பிரச்சாரத்தைத் தொடங்கிய அவர், செப்டம்பர் 20 முதல் டிசம்பர் 20 வரை ஒவ்வொரு சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் பல்வேறு இடங்களில் பொதுக்கூட்டங்களை நடத்த இருப்பதாக கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரச்சாரங்களுக்கு தேவையான அனுமதி விண்ணப்பங்களை எந்தவித பாரபட்சமும் இன்றி பரிசீலிக்கவும், காவல்துறை அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்கவும் கடந்த 9 மற்றும் 15 ஆம் தேதிகளில் த.வெ.க. சார்பில் டிஜிபி-க்கு மனு அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, அனுமதி தொடர்பான விண்ணப்பங்களை உயர்நீதிமன்றம் நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் பரிசீலித்து அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி த.வெ.க. துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனுவை இன்று பிற்பகல் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி கோரினார். காவல்துறை கடைசி நேரத்தில் மட்டுமே கடுமையான நிபந்தனைகளுடன் அனுமதி வழங்குவதாகவும் அவர் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டினார்.

ஆனால், நீதிபதி என். சதீஷ்குமார் இந்த மனுவை இன்று விசாரிக்க மறுத்து, நாளை விசாரணைக்கு எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Exit mobile version